மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தான் நாட்டின் பிரதமராக இருக்க வேண்டும் என, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். இதற்கான காரணங்களையும் அவர் விளக்கியுள்ளார்.


”பயப்படாத தலைவர் அவசியம்”


தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய சுப்ரமணிய சுவாமி, நாட்டிற்கு அதிகாரத்தில் உள்ளவர்களால் அச்சுறுத்த முடியாத ஒரு உண்மையான எதிர்க்கட்சி தேவை என்று நினைக்கிறேன். எனக்கு நிறைய தலைவர்களை தெரியும். ஆனால், அவர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஒரு கட்டத்திற்கு மேல் செல்லமாட்டார்கள். ஏனென்றால் அமலாக்கத்துறை அல்லது வேறு ஏதாவது ஒரு அமைப்புகள் மூலம் தங்கள் மீது நடவடிக்கை பாயும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். இது இந்திய ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.


”அச்சுறுத்த முடியாது”


ஆளுங்கட்சிக்கு நண்பர் அல்லாத ஒருவர் தான் தற்போது நாட்டிற்கு தேவை. அதுபோன்ற பலரை நாம் காணலாம். இந்த நடவடிக்கைகளை சிலர் பகிரங்கமாகவும், சிலர் சத்தமின்றியும் செய்கின்றனர்.  மம்தா பானர்ஜி இந்தியாவின் பிரதமராக வேண்டும். அவர் ஒரு துணிச்சலான பெண். அவர் எப்படி கம்யூனிஸ்டுகளை எதிர்த்துப் போராடினார் என்பதைப் பாருங்கள். நான் அவரை 10 நாட்களுக்கு முன்பு சந்தித்தேன், ஆனால் அது யாருக்கும் தெரியாது.  மம்தா பானர்ஜியை அச்சுறுத்துவது என்பது சாத்தியமற்றது என்றார். 


பேசியது என்ன?


அந்தச் சந்திப்பில் பானர்ஜிக்கும் அவருக்கும் இடையே என்ன நடந்தது என்று கேட்டதற்கு, 2024 எப்படி இருக்கும், அப்போது பொருளாதாரத்தின் வடிவம் என்னவாக இருக்கும் என்று விவாதித்ததாக கூறினார்.


சக்திவாய்ந்த பெண் யார்?


நாட்டிலேயே மிகவும் சக்திவாய்ந்த பெண்மணி யார் என்பது தொடர்பான கேள்வி  கேட்டதற்கு, ஒரு காலத்தில் ஜெயலலிதாவும், அதற்கு பின்பு மாயாவதியும் சக்திவாய்ந்த பெண்மணியாக இருப்பர் என கருதினே. ஆனால், தற்போதைய சூழலில் நாட்டின் வலிமையான பெண் என்றால் அது மம்தா பானர்ஜி தான் எனவும் சுப்ரமணிய சுவாமி கூறினார்.


2024 தேர்தல்:


அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. பாஜகவை எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் நிதீஷ் குமார் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் முக்கிய நபராக உள்ளார். மற்ற எதிர்க்கட்சிகளை காட்டிலும் பாஜகவை விமர்சிப்பதில் அவர் அதிக கடுமைகாட்டி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் கூட, பாஜகவிற்கு மட்டும் வாக்களிக்காதீர்கள் என பொதுமக்களிடம் கோரிக்கை வைத்து இருந்தார். இந்த சூழலில் மம்தா பிரதமராக வேண்டு என, பாஜகவை சேர்ந்த சுப்ரமணியன் சுவாமி கூறி இருப்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.