கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, வரவிருக்கும் தேர்தலிலும் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. அதற்காக, மாநிலத்திற்கு மாநிலம் தனித்தனியே வியூகம் அமைத்து, தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.


தமிழ்நாட்டை குறிவைக்கும் பாஜக:


கடந்த இரண்டு தேர்தல்களிலும், பாஜக வெற்று பெறுவதற்கு உத்தர பிரதேசம், பிகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களே காரணம். மேல்குறிப்பிட்ட இந்த மாநிலங்களில், 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகளில் பாஜகவே வெற்றிபெற்றது.


ஆனால், இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சிக்கு எதிரான மன நிலை, பிகார், மகாராஷ்டிரா மாநிலங்களில் நிலவி வரும் அரசியல் சூழல் ஆகியவை பாஜகவுக்கு சவால் விடும் வகையில் உள்ளது. எனவே, இந்த மாநிலங்களில் ஏற்படும் இழப்பை தென் மாநிலங்களில் சரிகட்ட பாஜக முயற்சித்து வருகிறது.


பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் இபிஎஸ்க்கு முக்கியத்துவம்:


குறிப்பாக, தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் பலத்துடன் வெற்றிபெற பாஜக முயற்சி செய்து வருகிறது. இதனால்தான், தமிழ்மொழியின் முக்கியத்துவம் குறித்தும் தமிழர்கள் பற்றியும் பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில், பிரான்ஸ் நாட்டுக்கு சென்ற மோடி, உலகின் பழமையான மொழி தமிழ் என்றும் அங்கு திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என கூறியிருந்தார்.


இப்படி தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் பாஜக, கூட்டணி கட்சிகளின் கூட்டத்திலும் அதே வியூகத்தை கையாண்டுள்ளது.  டெல்லியில் நடந்து வரும் பாஜக கூட்டணி கட்சிகளின் (தேசிய ஜனநாயக கூட்டணி) கூட்டத்தில் அதிமுக சார்பில் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.


இந்த கூட்டத்தில் 38 கட்சிகள் கலந்து கொண்டாலும், கூட்டத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று ஐந்து தலைவர்களில் எடப்பாடி பழனிசாமியும் ஒருவர். இவரை தவிர, பாஜக தேசிய தலைவர் நட்டா, பிகார் முன்னாள் முதலமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, நாகாலாந்து முதலமைச்சர் நெய்பியு ரியோ ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.


இதையடுத்து, கூட்டத்தில் பிரதமர் மோடியின் இருக்கைக்கு அருகே எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கை அளிக்கப்பட்டிருந்தது. மத்திய அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், மற்ற கூட்டணி கட்சி தலைவர்கள் என பலர் கூட்டத்தில் இருந்த போதிலும், பழனிசாமிக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.


அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடத்தப்படவிருக்கும் சூழலில், பாஜக கூட்டணி கட்சிகளின் சார்பில் நடத்தப்படும் முதல் கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில், ஆந்திராவில் இருந்து நடிகரும் ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், கேரள காங்கிரஸ் (தாமஸ்) பிரிவு தலைவர் பி.சி. தாமஸ், பிகாரில் இருந்து ராஷ்டிரிய லோக் சம்தா கட்சியின் உபேந்திர சிங் குஷ்வாஹா, விகாஷீல் இன்சான் கட்சியின் முகேஷ் சஹானி ஆகியோர் கலந்து கொண்டனர்.


தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்றுள்ள பாஜக கூட்டணியில் இணைந்துள்ள மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.