திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி விமான விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளார். விமானியின் சாதுர்யத்தால்தான் உயிர் பிழைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


பிரசாரம்..


5 மாநில தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் முன்னதாக அனைத்துக் கட்சியினரும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதன்படி  உத்தரபிரதேசத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
 பிரசாரத்தை முடித்துவிட்டு கொல்கத்தாவுக்கு விமானம் மூலம் திரும்பியுள்ளார் முதலமைச்சர் மம்தா பானர்ஜி. வழக்கம்போல் சென்றுகொண்டிருந்த விமானம் திடீரென அதிகமாக குலுங்கியுள்ளது. விமானத்தில் ஏதேனும் கோளாறா என மம்தா பானர்ஜி மற்றும் அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அதிக குலுங்கலுக்கு உள்ளான விமானம் அதிவேகமாக கீழ் இறக்கப்பட்டுள்ளது. இதனால் மம்தா பானர்ஜிக்கு உள்காயமும் ஏற்பட்டுள்ளது.




நடந்தது என்ன? 


இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் ஆனநிலையில் இது குறித்து மம்தா தெரிவித்துள்ளார். நடந்ததை விளக்கமாக கூறிய மம்தா, 'நான் பயணம் செய்த விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தது.  அப்போது எதிரே மற்றொரு விமானம் நேருக்கு நேராக வந்துள்ளது. சில வினாடிகள் விமானி கவனிக்கத்தவறி இருந்தால் விமானம் நேருக்கு நேர் மோதி இருக்கும். சாதுர்யமாக செயல்பட்ட விமானி அதிவேகமாக விமானத்தை கீழிறக்கி பாதையை மாற்றினார். சுமார் 6000 அடிகள் விமானம் திடீரென கீழிறங்கியது. இதனால் எனக்கு உள்காயம் ஏற்பட்டது.  தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறேன் என்றார்.


விளக்கம் கேட்பு.. 


விமானம் சென்ற பாதையில் மற்றொரு விமானம் நேர் எதிரே வந்தது எப்படி என்று மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குனரகத்துக்கு மேற்குவங்க அரசு கடிதம் எழுதியுள்ளது. ஆனால் இதுவரை எந்த விளக்கத்தையும் மத்திய அரசோ விமான போக்குவரத்து துறை இயக்குனரகமோ கொடுக்கவில்லை என மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.