தமிழ்நாடு மற்றும் கர்நாடகா என இரண்டு மாநிலங்களுக்கும் மிகவும் முக்கியமான நீர் ஆதாரமாக உள்ள நதி என்றால் அது காவிரி. இரு மாநிலங்களிலும் இந்த நதியை நம்பி குடிநீர் மட்டும் இல்லாமல் விவசாயப் பாசனமும் இருப்பதால் இந்த ஜீவநதியின் தேவையை மற்ற நதிகளால் ஈடுகட்ட முடியாது. இரு மாநிலங்களிலும் போதுமான அளவு மழை பெய்தால் நதி நீர் பங்கீடு என்பது பொருட்டாகவே கருதப்படுவதில்லை. ஆனால் போதுமான மழை பெய்யாமல் போனால் இரு மாநிலங்களுக்கும் இடையிலான நதிநீர் பங்கீட்டு பிரச்னை என்பது தலைப்புச் செய்தியாகவே மாறிவிடுகின்றது. இந்த பிரச்னையைத் தீர்க்க இரு மாநில அரசுகள் தொடங்கி மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் என அனைத்தும் தலையிட்டும் பிரச்னை தீராமல்தான் உள்ளது. 


இதில் கர்நாடகா தரப்பில் காவிரி நதி எங்கள் மாநிலத்தில் தான் உற்பத்தி ஆகின்றது அதனால் எங்கள் பயன்பாட்டிற்குப் போகத்தான் தமிழ்நாட்டிற்கு கொடுக்க முடியும் எனவும், நதி அதிகப்படியாக ஓடும் நிலப்பரப்பு தமிழ்நாட்டில் உள்ளது எனவே தமிழ்நாட்டின் பயன்பாட்டிற்கு கட்டாயம் நீர் தரவேண்டும் எனவும் இரு மாநிலங்களும் தங்கள் தரப்பு வாதத்தினை வைத்து வருகின்றன. 


இந்நிலையில் இன்று அதாவது நவம்பர் 23ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 90வது  கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில்  தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டம் வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் நடைபெற்று வருகின்றது. 


கடந்த 3ஆம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் நவம்பர் 1 முதல் 23ம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் திறந்துள்ளதா? என்பதை கணக்கீடு செய்ய இந்த கூட்டம் நடைபெறுகிறது. 


காவிரி விவகாரம்:


தமிழ்நாட்டில் தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் விவசாயத்திற்கான தண்ணீரை வழங்க கர்நாடகா அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அது காங்கிரஸ் அரசாங்கமாக இருந்தாலும் சரி, பாஜக அரசாக இருந்தாலும் சரி. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தையும், உச்சநீதிமன்றத்தையும் நாடித்தான் டெல்டா பகுதி மக்களுக்கு தண்ணீர் பெற்று தர வேண்டியதாக இருக்கிறது.


அந்த வகையில் இந்த முறையும் கூட சம்பா சாகுபடிக்காக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு தரவில்லை. அதன்பிறகு, தமிழ்நாடு அரசின் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு காவிரி டெல்டா பாசனத்திற்காக கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்க, அதன்பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் அதையே உத்தரவாக பிறப்பித்தது. அதன்படி, முன்னதாக ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில் அதனை கர்நாடக அரசு திடீரென குறைத்தது.


தண்ணீர் அளவு:


காவிரிப் படுகையில் அக்டோபர் 16 முதல் 27-ம் தேதி வரை பெய்த மழை வழக்கத்தை விட குறைவாகவே பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியது. 


இந்தநிலையில், நடப்பு நீர் ஆண்டில் ஜூன் 1 முதல் 26 வரை 140 டிஎம்சி தண்ணீர் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், கர்நாடக 56.394 டிஎம்சி அளவிலான தண்ணீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் நீர்த்தேக்கத்தில் 93 டிஎம்சி கொள்ளளவிற்கு, 18 டிஎம்சி நீர் மட்டும் இருப்பதால், காவிரி நீரை நம்பி பயிரிடப்பட்ட பயிர்களை பராமரிக்க முடியாமல் விளைந்த பயிர்கள் கருகி வருகின்றன.