மேற்குவங்கம் பூர்பா மேதினிபூர் மாவட்டத்தில் எக்ரா பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் மக்களை சோகத்தில் ஆழ்த்திய நிலையில், எக்ரா பகுதி மக்களிடம் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா மன்னிப்பு கேட்டுள்ளார்.
பட்டாசு ஆலை விபத்து:
பட்டாசு ஆலை விபத்து நடந்து 11 நாள்கள் ஆன நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மாநில முதலமைச்சருமான மம்தா, காதிகுல் கிராமத்திற்கு இன்று நேரில் சென்று மக்களிடம் மன்னிப்பு கோரினார்.
விபத்தில் இறந்தவர்களுக்கு நிதி உதவிக்கான காசோலை வழங்கிய பிறகு பேசிய மம்தா, "இந்த சம்பவத்திற்கு (மே 16 அன்று சட்டவிரோதமாக இயங்கி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து) தலை வணங்கி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உளவுத்துறை சரியாக செயல்பட்டிருந்தால் இந்த வெடிவிபத்தை தடுத்திருக்கலாம்.
சட்டவிரோதமாக இயங்கிய பட்டாசு ஆலையை வைத்திருந்த குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு ஏதேனும் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுவதைக் கண்டறிந்தால், உள்ளூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கிராம மக்களை வலியுறுத்துகிறேன்" என்றார்.
மக்களிடம் தலைவணங்கி மன்னிப்பு கேட்ட முதலமைச்சர்:
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் இருந்து தலா ஒருவருக்கு ஹோம் கார்டு பணிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கினார். மம்தாவுடன், விபத்து நடந்த பகுதிக்கு தலைமை செயலாளர் எச்.கே. திவேதியும் சென்றிருந்தார்.
உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த மாதத்தில் மட்டும் அடுத்தடுத்து மூன்று பட்டாசு ஆலையில் விபத்து நடந்துள்ளது. இதற்கிடையே, விபத்து நடந்த பகுதிக்கு மம்தா சென்றிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 16ஆம் தேதி, எக்ராவில் நடந்த விபத்துக்கு பிறகு, 21ஆம் தேதி அன்று தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பட்ஜ் பட்ஜில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
விபத்து சம்பவம் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. என்ஐஏவிடம் வழக்கின் விசாரணையை ஒப்படைக்க கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அதை நிராகரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணையை சிபி-சிஐடி தொடரும்படி கேட்டு கொண்டது.
மேற்குவங்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல், திரிணாமூல் ஆட்சி நடந்து வருகிறது. 34 ஆண்டுகால இடதுசாரிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறார் மம்தா.