‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் இயக்குநர் சுதிப்டோ சென் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை விளம்பரம் செய்வதற்காக நாடு முழுவதும் தொடர்ந்து பயணம் செய்ததே அவரது திடீர் உடல்நலக்குறைவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. அவர் மீண்டும் குணமடையும் வரை படத்தின் புரொமோஷன் பணிகள் அனைத்து நகரங்களிலும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


விபுல்ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியானது. அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இதன் டீசர் வெளியானதில் இருந்தே படத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கேரளாவைச் சேர்ந்த இந்து பெண்கள் இஸ்லாம்  மதத்திற்கு மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதையைக் கொண்ட இந்தப் படத்துக்கு கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.


முன்னதாக, இந்த படம் தமிழக திரையரங்குகளில் கடந்த 5-ந்தேதி வெளியானது. தமிழகத்தில் இந்த படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னையில் அண்ணாநகர், அமைந்தகரை, ராயப்பேட்டை, வேளச்சேரி, உள்ளிட்ட இங்களில் உள்ள வணிக வளாகங்களில் இயங்கும் திரையரங்குகளிலும், மதுரவாயலில் உள்ள ஒரு பிரபல திரையரங்கிலும் என 7 இடங்களில் இந்த படம் வெளியானது. 


ஏற்கனவே இந்த படத்தின் டீசருக்கு இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், இந்த படத்துக்கு தமிழகத்தில் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று மாநில உளவுத்துறை அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடியானதால் இந்த திரைப்படம் திட்டமிட்டப்படி திரையிடப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக தென் தமிழகத்தில் இந்த படம் திரையிடப்படவில்லை. இந்த திரைப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்த திரைப்படம் வெளியான திரையரங்குகள் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழகம் முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால், தமிழக திரையரங்குகளில் இந்த படம் கடந்த 7ஆம் தேதி முதல் திரையிடப்படாது என முடிவு செய்யப்பட்டது.


தென்னிந்தியாவில் இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், வட இந்தியாவில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வரவேற்பை பெற்றது. இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.200 கோடியை கடந்து வசூலித்து வருகிறது.