நாட்டில் உள்ள வளங்களை பயன்படுத்தி குடிமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக திட்டக்குழு உருவாக்கப்பட்டது. உற்பத்தியை அதிகரித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டது. இதற்காக, ஐந்தாண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டது.


நிதி ஆயோக் அமைப்பின் நோக்கம்:


கடந்த 2014ஆம் ஆண்டு, பிரதமராக மோடி பதவியேற்றதை தொடர்ந்து, திட்டக்குழு கலைக்கப்பட்டு, அதற்கு பதில் நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது. பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துவதற்கான கொள்கைகளை வகுப்பதே நிதி ஆயோக்கின் முக்கிய நோக்கம். பிரதமர், மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேச முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள், நிரந்தர உறுப்பினர்கள் ஆகியோர் இதன் உறுப்பினர்களாக உள்ளனர்.


இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. ராஜஸ்தான், கேரளா, டெல்லி, பஞ்சாப், தெலங்கானா, மேற்குவங்கம், பீகார் மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். உடல்நல பிரச்னையை காரணம் காட்டி ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.


ஆட்சி மன்ற கூட்டம்:


கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், குறிப்பிட்ட காரணம் எதுவும் சொல்லாமல் கூட்டத்தை புறக்கணித்துள்ளார். நிதி ஆயோக் கூட்டம் தொடர்பாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், "மத்திய அரசின் சமீபத்திய அவசர சட்டத்திற்கு எதிராக கூட்டத்தை புறக்கணிக்கிறேன்.


நாட்டில் கூட்டாட்சி தத்துவம் கேலிக்கூத்தாக மாறிவிட்டது. அதேபோல, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், மோடிக்கு எழுதிய கடிதத்தில், "பஞ்சாபின் நலன்களில் மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை. அதனால், நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த முந்தைய கூட்டத்தில், ஊரக வளர்ச்சி நிதி அளிக்காதது, பயிர் கழிவு எரிப்பு, விவசாயிகளின் பிரச்னை போன்றவற்றை எழுப்பினேன். 


மாநில முதலமைச்சர்கள் புறக்கணிப்பு:


இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணாத வரை, இதில் பங்கேற்பது பயனற்றது" என குறிப்பிட்டுள்ளார். பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணியை அமைக்க தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா, பிகார் முதலமைச்சர் நிதிஷ் ஆகியோர் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அவர்கள் கூட்டத்தை புறக்கணித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.


மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தை புறக்கணித்ததற்கு அரசு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. "நிதி ஆயோக் ஆட்சி மன்றக் கூட்டத்தை முதலமைச்சர்கள் புறக்கணிப்பது மாநிலத்தின் வளர்ச்சியைப் புறக்கணிப்பதற்குச் சமம். ஆட்சி மன்ற கவுன்சில் கூட்டத்தில் (ஜிசிஎம்) நூற்றுக்கும் மேற்பட்ட முக்கியமான பிரச்சினைகள் விவாதிக்கப்படும். மேலும் பிரதிநிதித்துவம் இல்லாத மாநிலங்கள் இழக்க நேரிடும்" என மத்திய அரசு சார்பில் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.