இந்திய பாராளுமன்ற மக்களவையில், டிசம்பர் 13ஆம் தேதி பார்வையாளர்கள் வரிசையில் இருந்த இருவர் மக்களவை உறுப்பினர்கள் அமரும் இடத்தில் அத்துமீறி குதித்து புகைக் குண்டுகளை வீசிக்கொண்டே சபாநாயகர் இருக்கையை நோக்கி ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் பாராளுமன்றத்திற்கு வெளியேவும் இருவர் புகைக் குண்டுகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இன்று விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் கோரிக்கை வைத்தனர். ஆனால் மத்திய அரசு அவர்களுக்கு செவி சாய்க்காததால், எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் மாநிலங்களவையில் இருந்து ஒரு எம்.பியும், மக்களவையில் இருந்து 14 எம்.பிக்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதில் தமிழ்நாட்டினைச் சேர்ந்த திமுக எம்.பி கனிமொழி, காங்கிர்ஸ் எம்.பி ஜோதிமணி கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு. வெங்கடேசன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதில் திமுக எம்.பி பார்த்திபனையும் தகுதி நீக்கம் செய்ததாக அறிவிப்பு வந்த நிலையில், அவர் இன்றைக்கு அவைக்கே வரவில்லை என கூறப்பட்ட பின்னர் சபாநாயகர் தனது உத்தரவை திரும்பப் பெற்றார். 


இந்நிலையில் இது தொடர்பாக மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே, நேற்று அதாவது டிசம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு மீறல் குறித்து மாநிலங்களவை சபாநாயகரும் துணை குடியரசுத் தலைவருமான ஜெகதீப் தன்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ,






”பாராளுமன்றத்தின் பாதுகாப்பு மீறல் என்பது சமீப காலங்களில் இல்லாத மிகவும் கண்டனத்திற்குரிய விஷயமாகும். இந்த விஷயத்தின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, பாராளுமன்றத்தில் உள்ள I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, இந்த விவகாரம் குறித்து பரிசீலித்தேன். மாநிலங்களவையின் (ராஜ்யசபா) விதிகளில் நடைமுறை விதி 267ன் கீழ் இந்த விவகாரம் அவைக்குறிப்பில் குறிப்பிடப்படவேண்டும். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உள்துரை அமைச்சர் அமித் ஷா அறிக்கை சமர்பிக்கும் வரையில் விதி 267-இன் கீழ்  இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தப்படும் வரை அவையில் வேறு எந்த விதமான நடவடிக்கைகளும் இருக்கக் கூடாது. பாதுகாப்பை விட முக்கியமானது எதாவது இருக்கின்றதா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.