மாலத்தீவு அதிபர் முகமது முய்சு மற்றும் அவரது மனைவியும் மாலத்தீவின் முதல் பெண்மணியுமான சஜிதா முகமது ஆகியோர் இரு தரப்பு பேச்சுவார்த்தைக்காக இந்தியாவிற்கு முதல்முறையாக வந்துள்ளனர்.


கடந்தாண்டு நவம்பர் மாதம், மாலத்தீவில் சீன ஆதரவு முகமது முய்சு அரசாங்கம் அமைந்ததில் இருந்தே, இந்திய - மாலத்தீவு நாடுகளுக்கு இடையே நிலவி வந்த சுமூகமாக உறவு பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டு ஆட்சியை பிடித்தவர் முகமது முய்சு.


இந்திய - மாலத்தீவு நாடுகளின் உறவு:


தேர்தல்போதே, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தை வெளியேற்றுவேன் என வாக்குறுதி அளித்தார் முகமது முய்சு. மாலத்தீவு அதிபராக அவர் பதவியேற்ற உடனேயே, இந்திய ராணுவத்தை வெளியேற்ற உத்தரவிட்டார். முய்சுவின் பதவியேற்பு விழாவுக்கு சென்ற இந்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவிடம் இது தொடர்பான முடிவை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.


இந்தியாவுக்கு எதிராக தொடர் நடவடிக்கையில் ஈடுபட்ட மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேற காலக்கெடு விதித்தார். மாலத்தீவின் கோரிக்கையை ஏற்று இந்திய ராணுவமும் அங்கிருந்து வெளியேறியது.


அதிபராக முய்சு பதவியேற்றதில் இருந்து இந்திய, மாலத்தீவு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், முதல்முறையாக இரு தரப்பு பயணமாக டெல்லி வந்துள்ளார் முய்சு. அவருடன் அவரது மனைவி சஜிதா முகமதும் வந்துள்ளார்.


முய்சுவின் டெல்லி பயணம்: 


அவரை மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கிரிட்டி வர்தன் சிங் வரவேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில், முய்சுவின் இந்த பயணம் அமைந்துள்ளது. இந்த பயணத்தின் போது, ​இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற மூத்த அதிகாரிகளை அதிபர் முய்சு சந்தித்து பேச உள்ளார். 


இந்தாண்டு ஜூன் மாத தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு, முகமது முய்ஸு இந்த ஆண்டு இந்தியாவுக்கு வருவது இது இரண்டாவது முறையாகும். பொதுவாக, மாலத்தீவு அதிபர்கள், பதவியேற்றவுடன் இந்தியாவுக்குதான் முதல்முறையாக வருவார்கள். ஆனால், முய்சு, முதலில் துருக்கிக்கும் பின்னர் சீனாவுக்கு சென்றார்.