2024 மக்களவை தேர்தலை அரசியல் கட்சி தலைவர்களை தொடர்ந்து, பல்வேறு சினிமா பிரபலங்களும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஹேமமாலினி மற்றும் மனோஜ் திவாரி ஆகியோர் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்களின் தொகுதிகளில் வெற்றி பெற்றனர். அதேபோல், தனது முதல் தேர்தலில் போட்டியிட்ட பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும் மண்டி தொகுதியில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த மக்களவை தேர்தலுக்கு மத்தியில், மற்றொரு பெரிய திரைப்பட நடிகரும் தனது மாநில சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று அசத்தினார். அவர் வேறுயாரு மல்ல பவன் கல்யாண்தான்.
2014ம் ஆண்டு ஜனசேனா என்ற கட்சியை தொடங்கிய பவன் கல்யாண், 2019ம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் 140 இடங்களில் போட்டியிட்டார். ஆனால், இவரது கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றது. அந்த தேர்தலில் பவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்தநிலையில், பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி கடந்த 2020ல் பாஜகவுடன் கூட்டணி வைத்த தெலுங்கு தேசத்துடன் கைகோர்த்தது. 2024 ல் தேர்தலை சந்தித்த இந்த கட்சிகள் அமோக வெற்றிபெற்றது. ஜனசேனா கட்சி 21 சட்டமன்றத் தொகுதிகளிலும், 2 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் வெற்றிபெற்றது. மேலும், பிதாரபுரம் தொகுதியில் போட்டியிட்ட பவன் கல்யாணும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
இந்தநிலையில், 2024 ஆந்திர சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பவன் கல்யாணுக்கு, நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அதில், “ உணர்ச்சிப்பூர்வமான உரையாடலை நடத்தி ஆந்திரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பவன் கல்யாணுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். ஆந்திரப் பிரதேச மக்களின் நம்பிக்கைகள் மற்றும் அவர்களுக்கு சேவை செய்யும் இந்தப் பயணத்தை அவர் தொடங்கும் வேளையில் அவருக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன்.
உன்னை நினைத்து பெருமை கொள்கிறேன் சகோதரா!” என வாழ்த்தியுள்ளார்.
பவன் கல்யாண் அரசியல் வந்த கதை:
பவன் கல்யாணின் மூத்த சகோதரரும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாருமான சிரஜ்சீவி கடந்த 2008ம் ஆண்டு ‘பிரஜா ராஜ்யம்’ என்ற பெயரிலான கட்சியை உருவாக்கினார். அந்த கட்சியில் இளைஞர் பிரிவான ‘யுவராஜ்யம்’ க்கு பவன் கல்யான் தலைவராக்கப்பட்டார். அதன்பிறகு, 2011ம் ஆண்டு சிரஞ்சீவி தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்து கொண்டார். தனது சகோதரரின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பவன் கல்யாண் வெளியேறினார்.
இதை தொடர்ந்து, கடந்த 2014ம் ஆண்டு பவன் கல்யாண் தனது சொந்த கட்சியை உருவாக்கி அதற்கு ஜனசேனா என்று பெயர் வைத்தார். அப்போது, பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிய சந்தித்த பவன், தெலுங்கு மாநில பிரச்சனைகள் குறித்து கோரிக்கை வைத்தார். தொடர்ந்து அதே ஆண்டு, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியை ஆதரித்தார். கடந்த 10 ஆண்டுகளாக ஜன சேனா கட்சியை வழிநடத்தி, தற்போது 2024ல் தனது கட்சியை எதிர்க்கட்சி என்ற அளவிற்கு உயர்த்தியுள்ளார்.