தேசிய மகளிர் ஆணையத்தின் (NCW) தலைவர் ரேகா ஷர்மாவை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மீது டெல்லி போலீஸார் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதிதாக இயற்றப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டப்பிரிவு 79 (பெண்ணை இழிவுப்படுத்தும் வகையில் செயல்பட்டது) கீழ் மொய்த்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டது.
மஹுவா மொய்த்ராவுக்கு வினையாக மாறிய ட்வீட்: கடந்த ஜூலை 2 ஆம் தேதி, உத்தரப் பிரதேசம் ஹத்ராஸில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 121 பேர் கொல்லப்பட்டனர். அங்கு ஆய்வு செய்வதற்காக தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் சென்றார்.
இதையடுத்து, சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்று வைரலானது. அதில், ஹத்ராஸில் ஆய்வு செய்தபோது, ரேகா ஷர்மா நடந்து செல்வதும் அவருக்கு ஒருவர் குடை பிடிப்பதும் பதிவாகியிருந்தது. தன்னுடைய குடையை அவரே பிடிக்க மாட்டாரா மற்றொருவர்தான் பிடிக்க வேண்டுமா என பலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அப்போது, ரேகா ஷர்மாவை அவமதிக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்.பி. மஹுவா மொய்த்ரா பதிவு வெளியிட்டிருந்தார். "தன்னுடைய முதலாளியின் பைஜாமாவை தூக்கி பிடிப்பதில் அவர் பிஸியாக இருந்தார்" என மொய்த்ரா குறிப்பிட்டிருந்தார்.
தேசிய மகளிர் ஆணைய தலைவர் குறித்து என்ன பேசினார்? இந்த கமெண்ட்-க்கு கடுமையான எதிர்வினையாற்றிய தேசிய மகளிர் ஆணையம், "இந்த கருத்துக்கள் ஒரு பெண்ணின் கண்ணியத்தை மீறும் வகையில் உள்ளது. பாரதிய நியாய சந்ஹிதா, 2023, சட்டப்பிரிவு 79 கீழ் வழக்கு பதிவு செய்யலாம் என ஆணையம் கருதுகிறது.
இதற்கு பதில் அளித்த மஹுவா மொய்த்ரா, முடிந்தால் தனக்கு எதிராக டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுக்கட்டும் என சவால் விடுத்திருந்தார். "நான் இப்போது நாடியாவில் இருக்கிறேன். என்னை விரைந்து கைது செய்ய வேண்டுமானால் அங்குதான் அடுத்த மூன்று நாள்களுக்கு இருப்பேன். எனது குடையை என்னை பிடிக்க முடியும்" என்றார்.
பாஜகவுக்கு எதிராகவும் அதானி குழுமம் தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, கடந்தாண்டு அவர் மக்களவை உறுப்பினராக பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
எந்த தொகுதி மக்களவை உறுப்பினராக பதவி நீக்கம் செய்யப்பட்டாரோ அதே தொகுதியில் போட்டியிட்டு மஹுவா மொய்த்ரா வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.