இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே டிஎன்ஏ தான். இந்துக்களும், முஸ்லிம்களும் வெவ்வேறு குழுவினர் இல்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.  


ஆர்எஸ்எஸ்ஸின் கிளை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் என்ற நிறுவனத்தின் சார்பில், ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சியில் மோக பகவத் கலந்து கொண்டார்.


அந்த நிகழ்ச்சி இந்துஸ்தானியும் இந்துஸ்தானுமே பிரதானம் என்ற தலைப்பில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தி மீட்டிங்க் ஆஃப் மைண்ட்ஸ் (The Meeting of Minds: A Bridging Initiative ) என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. டாக்டர் காஜா இஃப்திகார் அகமது இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். இவர் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.


காசியாபாத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில்  ஆர்எஸ்எஸ் தலைவரின் பேச்சிலிருந்து..


40,000 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் அனைவரும் ஒரே மூதாதையரின் வழிவந்தவர்கள் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்துக்களும், முஸ்லிம்களும் இரு வெவ்வேறு குழுவினர் அல்ல. இந்தியர்கள் அனைவருக்குமே ஒரே டிஎன்ஏ தான். இந்து முஸ்லிம் ஒற்றுமை பற்றி பேசவேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில், ஏற்கெனவே அவர்கள் ஒன்றிணைந்துதான் உள்ளனர். இந்துக்களோ முஸ்லிம்களோ யாரும் தனித்தனியாக ஆதிக்கம் செலுத்த முடியாது. இந்தியர்களாக ஒன்றிணைந்து மட்டும்தான் ஓங்கிநிற்க முடியும். முஸ்லிம்கள் இந்தியாவில் வாழக்கூடாது என ஏதேனும் ஒரு இந்து கூறினால், அவர் இந்துவாகவே இருக்க முடியாது. பசு மாடு நிச்சயமாக ஒரு புனிதமான விலங்குதான். ஆனால், பசுக்காவலர்கள் என்ற பெயரில் சக மனிதர்களைத் தாக்குபவர்கள் இந்துத்துவா கொள்கைக்கு எதிரானவர்கள். அதேபோல், சில இடங்களில் பசுவதைக்கு எதிராக தாக்குதல் நடத்தியதாக போலியாகவும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சட்டம் அத்தகையோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இந்தியாவில் உள்ள முஸ்லிம் சமூகத்தினர் அனைவரும், இஸ்லாம் இங்கு அச்சுறுத்தலில் இருப்பதாக நினைக்கக் கூடாது. அவ்வாறாக ஒரு போலி கற்பிதம் உருவாக்கப்படுகிறது. அதில் இங்குள்ள முஸ்லிம்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது. ஒற்றுமையின் அடிநாதம், தேசியவாதமாக இருக்க வேண்டும். நம் முன்னோர்களின் புனிதத்தன்மையை நாம் கொண்டாட வேண்டும்.


நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால்தான் நாடு வளர்ச்சியடைவது சாத்தியமாகும்.  இந்து - முஸ்லிம் பிரச்சினைகளை தீர்ப்பது என்பது பேச்சுவார்த்தை மூலம்தான் முடியும். உங்கள் முன்னோர்களை இந்துக்கள் என அழைக்கவிரும்பாவிட்டால், இந்தியர்கள் என அழையுங்கள். ஆனால், வார்த்தைகள் மூலம் வேறுபாட்டை மறந்து, நாட்டுக்காக ஒன்றாக இணைந்து பணியாற்றுங்கள். இதை நான் ஏதோ அரசியல் ஆதாயத்துக்காக, வாக்குவங்கியை நிரப்புவதற்காக சொல்வதாக யாரும் திரிக்க வேண்டாம். இதற்கு முன்னர்கூட நான் தர் உல உலூம் காஜிக்களை சந்தித்துப் பேசியிருக்கிறேன். இஸ்லாமியர்கள் ஆதரித்துப் பேசுவதால் சுயபிம்பத்தை கட்டமைக்க முயற்சிக்கும் எண்ணம் எனக்கோ நான் சார்ந்துள்ள இயக்கத்தைச் சேர்ந்த எவருக்குமோ இருந்ததே இல்லை.


உத்தரப் பிரதேச மாநிலம் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்கிறது. இதில் ஆட்சியைத் தக்கவைக்க பாஜக கடும் பிரயத்தனம் செய்துவருகிறது. அண்மையில், நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கணிசமான வெற்றியைப் பெற்றது. இதனால், சட்டப்பேரவைத் தேர்தலில் கிராமப்புறங்களிலும் தங்களை நிரூபிக்கமுடியும் என பாஜக நம்புகிறது. இச்சூழலில் ஆர்எஸ்எஸ் தலைவரின் இந்தப் பேச்சு, வாக்குவங்கி அரசியலே என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.