மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மாநிலமே வெள்ளக்காடாய் மாறியுள்ளது. இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று புனேவிற்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பால்கர், ராய்காட், ரத்னகிரி, சடரா ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.






தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது. மேலும் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் தொடர் மழை காரணமாக யமுனோத்ரி, பத்ரினாத் உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளில் நெஞ்சாலை போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் யவாத்மல் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. பல வீடுகளில் நீர் புகுந்துள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். உண்ண உணவின்றி, தங்குவதற்கு சரியான இடமின்றி, மின்சாரமின்றி யவாத்மாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக நிலைகுளைந்துள்ளது.






ஹிமாச்சல பிரதேசத்தில் கின்னௌர் பகுதியில் தொடர்மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு 5 தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது.






ராய்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் தற்போது வரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் 100 க்கும் அதிகமானோரின் நிலை என்ன என்பது தெரியவில்லை என்றும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள ஆறு முக்கிய ஆறுகளில், சாவித்ரி மற்றும் பாதல்கனகா, அபாயக் குறியைத் தாண்டியுள்ளது. அதேபோல் குண்டலிகா மற்றும் அம்பா ஆறுகள் எச்சரிக்கை அளவை எட்டியுள்ளது என்றும் காதி மற்றும் உல்லாஸ் எச்சரிக்கை குறிக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது என்றும் மாவட்ட நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


என்.டி.ஆர்.எஃப் மகாராஷ்டிரா முழுவதும் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவ 12 குழுக்களை களமிறக்கியுள்ளது. மும்பையில் ஐந்து குழுக்களும், பால்கர், ராய்காட், ரத்னகிரி, கோலாப்பூர், சாங்லி, நாக்பூர் மற்றும் தானே ஆகிய இடங்களில் தலா ஒரு குழுவும் அனுப்பப்பட்டுள்ளது.