மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியில் கணவரால் உயிருடன் எரிக்கப்பட்டதாகக் கூறப்படும் 35 வயது பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.


 






போபரில் அமைந்துள்ள அவர்களது வீட்டில் ப்ரீத்தி சாந்தாராம் பாட்டீல் மற்றும் அவரது மகள்கள் சமீரா (14), சமிக்ஷா (11) ஆகியோருக்கு சனிக்கிழமை காலை பலத்த தீக்காயம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து விவரித்த காவல் நிலைய மூத்த ஆய்வாளர் எஸ்.ஆர்.பாக்டே, "90 சதவீத தீக்காயங்களுக்கு உள்ளான சிறுமிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த பெண்ணின் கணவர் பிரசாத் சாந்தாராம் பாட்டீல் (40) என்பவரும் சம்பவத்தின் போது தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.


சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் தீ பரவியது. ஆனால், இது பற்றி தங்களுக்கு காலை 8.30 மணியளவில் தெரிவிக்கப்பட்டது. மூன்று மணி நேரம் தாமதமாக தகவல் தெரிவிக்கப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெளிவுப்படுத்தியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் அவரது மனைவி மற்றும் மகள்களை துன்புறுத்தியதாகவும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. அவர் சதித்திட்டம் தீட்டி தனது மனைவி மற்றும் மகள்களை உயிருடன் எரிக்க முயன்றார் என்றும் ஆனால், அதில் அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


புகாரின் அடிப்படையில், முதலில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது பிரிவு 307 (கொலை முயற்சி) கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் கொலை வழக்காக மாற்றப்படும் என காவல்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.


 






பெண்களுக்கு 49.7% குற்றங்கள் குடும்ப நண்பர்களாலும், அருகில் வசிப்பவர்களாலும், பணிபுரியும் இடத்தில் தெரிந்தவர்களாலும்தான் நடந்திருக்கின்றன. 42.4% குற்றங்கள் நண்பர்களாலும், சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமானவர்களாலும் அரங்கேறியுள்ளன.


`பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மூன்றில் ஒன்று நெருக்கமானவர்களாலேயே நடக்கிறது. 31.8% குற்றங்கள் பெண்ணின் கணவரால் அல்லது உறவினர்களால் நடக்கின்றன என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.