பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபக் என்ற தீபக்சனி காவல் பிடியில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பஞ்சாபி பாடகர் சித்தமூஸ்வாலா. இவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்து மூஸ்வாலா கொலைக்கு மூளையாக செயல்பட்ட லாரன்ஸ் பிஷ்னோயின் நெருங்கிய உதவியாளர் தீபக் . இவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், மூளையாக செயல்பட்டவர்கள் மற்றும் கொலையில் தொடர்புடையவர்கள் என 15 பேர் பட்டியலிடப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர். இவரை புரொடக்ஷன் வாரண்டின் பேரில் அவரை டெல்லி போலீசார் பஞ்சாப் அழைத்து வந்தனர்.
மத்திய புலனாய்வு ஏஜென்சியின் (சி.ஐ.ஏ.) பணியாளர் ஒருவர் அவரை இரவு 11 மணியளவில் கபுர்தலா சிறையில் இருந்து மான்சாவுக்கு தனது தனி வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, அந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.
தீபக் சிறையில் இருந்து தப்பிப்பது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, தீபக் கடந்த 2017ம் ஆண்டு அம்பாலா மத்திய சிறையில் தடுப்புக் காவலில் இருந்தபோது, போலீஸ் அதிகாரி ஒருவரின் கண்களில் பெப்பர் ஸ்பிரேயைப் பயன்படுத்தி தைரியமாக தப்பினார். அதேபோல மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது அவர் தப்பிச் சென்றார்.
28 வயது நிரம்பிய பஞ்சாப் பாடகரும், காங்கிரஸ் கட்சித் தலைவருமான சித்து மூஸ்வாலா, தன் பாடல்களில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வரிகளால் பெரிதும் பேசப்பட்டவர். பஞ்சாப் தேர்தலுக்கு முன்பு காங்கிரசில் இணைந்த பிரபல சித்து மூஸ்வாலா, கடந்த மே.29ஆம் தேதி மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவஹர்கே கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தொடர்ந்து அவர் உயிரிழந்த செய்தியை மான்சா மருத்துவமனையின் சிவில் சர்ஜன் டாக்டர் ரஞ்சீத் ராய் உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, சித்து மூஸ்வாலா உட்பட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உட்பட 420க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை வாபஸ் பெறுமாறு நேற்றுமுன்தினம் பஞ்சாப் காவல்துறை உத்தரவிட்டது. பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்ட ஒருநாள் கழித்து சித்து மூஸ்வாலா சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
முன்னதாக செப்டம்பர் 1 ஆம் தேதி, பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவின் கொலை தொடர்பாக கென்யாவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் அசர்பைஜானைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை அரசு உறுதிப்படுத்தியது, மேலும் இது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ச்சியாக அப்டேட் செய்யப்பட்டும் வருகிறது. இந்த நிலையில்தான் குற்றத்தில் தொடர்புடைய ஒருவரான தீபக் தப்பிச்சென்றுள்ளார்.