மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மும்பை சுற்றுப்பயணம் செய்திருந்தார். அங்கு அவர் அம்மாநில முதலமைச்சர் ஏக்ந்தா சிண்டே மற்றும் துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரை சந்தித்தார். அப்போது அவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இல்லத்திற்கு சென்று இருந்தார். அந்தச் சந்திப்பின் போது தேவேந்திர ஃபட்னாவிஸ் இல்லத்திற்கு வெளியே இருந்த ஒரு நபரை காவல்துறையினர் சந்தேகப்பட்டு கைது செய்தனர்.


இந்நிலையில் அவரிடம் நடத்திய விசாரணையில் உள்துறை அமைச்சரின் பாதுகாவலராக போலியாக கூறி அவர் அமைச்சரை நெருங்கியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். அவரிடம் நடத்தி விசாரணையின்போது சில விஷயங்கள் தெரியவந்தன. 






அதன்படி அவர் மகாராஷ்டிராவின் துலே பகுதியைச் சேர்ந்த ஹேமந்த் பவார் என்பது தெரியவந்துள்ளது. அத்துடன் இவர் ஒரு எம்பியின் பாதுகாவலர் என்று கூறி முதலில் உள்துறை அமைச்சரின் சுற்றுப்பயணத்தில் இணைந்துள்ளார். அதன்பின்னர் அவர் உள்துறை அமைச்சரின் பாதுகாவலர்களில் ஒருவர் என்று கூறியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அந்த நபர் உள்துறை அமைச்சரின் பாதுகவாலர்கள் அணிந்து வந்த பேட்ஜ் மற்றும் ஐடி கார்ட் வைத்திருந்துள்ளார். இதனால் அவர் மீது முதலில் சந்தேகம் எதுவும் வராமல் இருந்துள்ளது. 


இதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சரின் பாதுகாவலர்கள் பட்டியலை காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அதில் ஹேமந்த் பவார் பெயர் இடம்பெறவில்லை என்பது தெரியவந்தது. இதன்பின்னர் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். உள்துறை அமைச்சரின் பாதுகாப்பு காவலர்கள் பட்டியலில் இல்லாத நபர் அமைச்சர் அமித் ஷாவை நெருங்கியது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 






மகாராஷ்டிராவில் இருந்த சிவசேனா உத்தவ் தாக்கரே அரசு கடந்த ஜூலை மாதம் பெரும்பான்மை இல்லாமல் பதவி விலகியது. அதைத் தொடர்ந்து ஏக்நாத் சிண்டேவின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது. ஏக்நாத் சிண்டே மகாராஷ்டிரா முதலமைச்சராகவும், தேவேந்திர ஃபட்னாவிஸ் துணை முதலமைச்சராகவும் ஜூலை 30ஆம் தேதி பதவியேற்றனர். அந்தப் புதிய அரசு பதவியேற்ற பிறகு முதல் முறையாக அமித் ஷா மகாராஷ்டிரா பயணம் செய்திருந்தார். அந்தப் பயணத்தில் இந்தப் பாதுகாப்பு குறைப்பாடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.