மகாராஷ்டிர மாநிலத்தில் எருமை மாடு ஒன்று ரூ.80 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.


எருமை மாடு என்றாலே அனைவரும் திட்டுவதற்கே பயன்படுத்துவோம். அதற்கு வெயிலும் தெரியாது; மழையும் தெரியாது, ஆடி அசைந்து அன்னநடை போட்டு நடந்து வரும். சூடு சொரணை என்பதே இருக்காது. எவ்வளவு அடித்தாலும் வலிக்காது. இவையெல்லாம் எருமை மாட்டிற்கு நாம் வைக்கும் அடைமொழிகள். 


அவ்வளவு ஏன் எருமைப்பாலை குடிப்பதை விட பசும் பாலை குடிப்பதையே நம்மில் பெரும்பாலானோர் விரும்புகிறோம். ஆனால் எருமைக்காக அடித்துக்கொண்டு ஏலம் போட்ட சம்பவங்களும் நடந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இல்லை. மகாராஷ்டிராவில். 


ஆம் மகாராஷ்டிராவில் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்டதில் எருமை மாடு ஒன்று ஏகபோகமாக ஏலம் போயுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் ஷாங்கிலி  மாவட்டம் தாஸ்கான் கிராமத்தில் எருமை மாடு ஒன்று ரூ.80  லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. சுமார் ஒன்றரை டன் எடையுள்ள கஜேந்திரா என்ற அந்த எருமை மாட்டிடம் செல்பி எடுக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 


எடையை பராமரிக்க இந்த மாடு நாள் ஒன்றுக்கு 15 லிட்டர் பால் குடிப்பதாகவும், நான்கு வேலையும் கரும்பு, புற்கள் உட்கொள்வதாகவும் மாட்டின் உரிமையாளர் தெரிவிக்கிறார். இனப்பெருக்கத்துக்கு இந்த வகை மாடுகள் பெரிதும் உதவும் என்பதால் பல லட்சம் கொடுத்து வாங்க விவசாயிகள் போட்டி போட்டுள்ளனர். 




ஸ்வாபிமானி ஷேத்காரி சங்கதன் என்ற விவசாயிகள் சங்கம் டிசம்பர் 16 முதல் டிசம்பர் 20 வரை தாஸ்கானில் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ள்து. இதற்காக மகாராஷ்டிரா-கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள மங்சுலி கிராமத்தில் இருந்து எருமை மாடு ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. விலாஸ் நாயக் என்ற விவசாயிக்கு சொந்தமான இந்த எருமை மாட்டிற்கு அவர் கஜேந்திரா என பெயர் வைத்துள்ளார். 


இந்த கஜேந்திரா தாஸ்கான் கிராமத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. காரணம் அதன் உடலமைப்பும் இனப்பெருக்கத்திற்கான மரபணுக்களும் ஆகும். இதனால், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், நான்கு வயதுடைய கஜேந்திரன் போன்ற எருமை மாடுகளின் மூலம் லட்சக்கணக்கான ரூபாய்க்கு நல்ல மகசூல் பெற முடியும் என்பதால் அனைவரும் இதில் ஆர்வம் காட்டுகின்றனர். 


மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயிகள் சங்கமான ஸ்வாபிமானி ஷேத்காரி சங்கதன் மாவட்டத் தலைவர் மகேஷ் கராடே கூறுகையில், “இந்த எருமை நமது விவசாயப் பெருமையாக மாறிவிட்டது. இதனை வாங்க பல லட்சரூபாய் செலவாகும். ஏனெனில் இந்த எருமை மாடு நல்ல தரமான எருமைகளை இனப்பெருக்கம் செய்யும். கஜேந்திராவின் உத்வேகத்தால், எங்கள் கிராமத்தின் விவசாயிகள் ஆரோக்கியமான கால்நடைகளை வளர்ப்பதற்கான நடைமுறைகளைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால் அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.நமது மாவட்ட விவசாயிகளின் பொருளாதார நிலை மேம்பட வேண்டுமென்றால், கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவது அவசியமாகிறது” எனத் தெரிவித்தார்.