மகாராஷ்ட்ரா அரசியலில் பாஜகவின் நகர்வுகள் அம்மாநில அரசியலை ஆட்டம் காண செய்துள்ளது. கிட்டதட்ட 30 ஆண்டுகால கூட்டணியில் இருந்த பாஜகவும்,சிவசேனாவும் எதிரியாக மாறியது எப்படி என்பதை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்க்கலாம். 


கடந்த 1966 ஆம் ஆண்டு மகாராஷ்ட்ரா மராட்டியர்களுக்கே என்ற முழக்கத்துடன் பால் தாக்கரேவால் ஆரம்பிக்கப்பட்ட சிவசேனா கட்சி 1989 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தான் முதன் முதலாக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. கிட்டதட்ட 25 ஆண்டுகாலமாக தொடர்ந்து இந்த கூட்டணி தொடர்ந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முறிந்தது. 


அந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டதில் பாஜக 122 இடங்களிலும், சிவசேனா 63 இடங்களிலும் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியாக அமைந்த சிவசேனா அதன்பிறகு நடந்த பேச்சுவார்த்தை காரணமாக இணைந்து கூட்டணி ஆட்சியை மகாராஷ்ட்ராவில் அமைத்தன. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 2015 ஆம் ஆண்டு சர்ச்சையான சில சம்பவங்கள் நடைபெற்றது. 


அந்த ஆண்டு நடந்த ஜெயின் மதத்தினர் திருவிழாவை முன்னிட்டு மாட்டிறைச்சிக்குத் தடைவிதித்து பாஜகவால் நிர்வகிக்கப்பட்ட மாநகராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை கடுமையாக எதிர்த்த சிவசேனா மாட்டிறைச்சி விற்பனையில் இறங்கி பாஜகவுக்கே டஃப் கொடுத்தது. இதன்பின் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கசூரியின் புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இதற்கு பாஜக மூத்த தலைவர் அத்வானியின் உதவியாளர் சுதீந்தரா குல்கர்னி ஏற்பாடு செய்தார். 


இதனைக் கண்டு அதிருப்தியடைந்த சிவசேனா சுதீந்தரா குல்கர்னி  மீது கருப்பு மை வீசியது. இதுதொடர்பாக பாஜகவுக்கும்,சிவசேனாவுக்கும் மோதல் முற்றியது. தொடர்ந்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பாஜக நாட்டுப்பற்று பற்றி எங்களுக்கு உபதேசம் செய்கிறது. எங்கள் கட்சியின் தேசப்பற்று பிடிக்கவில்லை என்றால் கூட்டணியிலிருந்து வெளியேறலாம் என வெளிப்படையாக அறிவித்தார். 


இப்படி பிரச்சினைகள் ஒருபுறமிருக்க சிவசேனா-பாஜக கூட்டணி மட்டும் தொடர்ந்து கொண்டேயிருந்தது. ஆனால் 2018 ஆம் ஆண்டு தற்போதைய மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே 2019 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சிவசேனா தனித்து போட்டியிடும் என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இது சிவசேனாவுக்கு பின்னடைவாக அமையும் என தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து விலகியது.


மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக   2019 ஆண்டு பிப்ரவரி மாதம் பாஜக மேலிடம் சிவசேனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமூக முடிவு ஏற்பட்டது. அப்போது ஆட்சி பொறுப்பில் இரு கட்சிகளுக்கும் சம பங்கு உண்டு என கூட்டணி இணைந்ததில் முன்னாள் மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கருத்து ஒன்றை தெரிவித்தார். 


2019 சட்டமன்றத் தேர்தலும் வந்தது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வென்றது. ஆனால் ஆட்சி பொறுப்பில் சம பங்கு என நாங்கள் சொல்லவில்லை என பல்டியடித்தார். இதனால் சிவசேனா கொந்தளிக்க பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் கூட்டணிக்கு டாட்டா காட்டியது சிவசேனா. 


அதோடு இல்லாமல் இத்தனை நாட்களாக யாரை எதிர்த்து அரசியல் செய்தார்களோ காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு சேர்ந்து சிவசேனா கூட்டணி ஆட்சி அமைத்தது. உத்தவ் தாக்கரே 2019 ஆம் ஆண்டு நவம்பரில் முதலமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில் பல வகைகளில் எதிர்த்த தன்னை எதிர்த்த சிவசேனாவை காத்திருந்து பழி வாங்கியுள்ளது பாஜக. 


சிவசேனாவின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 38 பேரோடு பாஜக பக்கம் சென்றுள்ளார். இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 38 எம்எல்ஏக்கள்  உத்தவ் தாக்கரே அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொள்வதாக தெரிவித்துள்ளனர்.   இதன்காரணமாக மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. 


மகாராஷ்ட்ராவில் கட்டுப்பாடான கட்சியான சிவசேனாவில் உத்தவ் தாக்கரே குடும்பத்தை தாண்டி எதுவும் செய்து விட முடியாது என  அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட கட்சியை பாஜக கச்சிதமாக உடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண