மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பல்கார் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் ஒரே இரவில் கோடீஸ்வரராக மாறியுள்ளார். அவர் பிடித்த மீன்கள் சுமார் 1.33 கோடி ரூபாய் பணத்தை ஈட்டித் தந்துள்ளன. கடந்த செப்டம்பர் 1 அன்று, தனது வலை முழுவதும் 157 ‘கோல்’ வகை மீன்களைப் பிடித்ததாகவும், அவற்றின் மதிப்பு 1.33 கோடி ரூபாய் எனவும் செய்திகள் வெளிவந்தன.
சந்திரகாந்த் தாரே என்ற மீனவர் ’ஹர்பாதேவி’ என்ற பெயர் கொண்ட கப்பலில் 10 பேருடன் மீன் பிடிக்கச் சென்றுள்ளார். கடந்த ஆகஸ்ட் 15 அன்று, மகாராஷ்ட்ராவில் இரண்டு மாத மீன்பிடித் தடைக் காலம் அமலில் இருந்தது. முர்பே என்ற கரையோர கிராமத்தைச் சேர்ந்த சந்திரகாந்த் தாரே, பால்கார் நகரத்தின் கரைகளில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் வத்வான் என்ற இடத்தை அடைந்தது. சில நாட்கள் கடந்து, அந்த இடத்தில் வீசியிருந்த வலையை வெளியில் எடுத்தவர்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.
வலையில் இருந்து தப்பிக்க முயன்றபடி, சுமார் 157 ‘கோல்’ வகை மீன்கள் சிக்கியிருந்தன. தாரேவும், அவரது கப்பல் குழுவினரும் ’கோல்’ வகை மீன்களைக் ‘கடல் தங்கம்’ என்று அழைத்து, அவற்றைப் பிடித்ததைக் கொண்டாடி வருகின்றனர். இந்த மீனுக்கு அதன் சுவைக்காக தெற்கு ஆசியா, தென் கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் அதிக விலை கொடுத்து வாங்கப்படுகிறது. தான் பிடித்த மீன்களை ஏலம் விட்ட தாரே, பீஹார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளிடம் 1.33 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தனர். கொங்கன் கரையோரப் பகுதியிலேயே முதல் முறையாக இவ்வளவு பெரிய விலை கொடுத்து ‘கோல்’ வகை மீன்கள் விற்பனை நடந்துள்ளது.
சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, தாய்லாந்து, ஹாங் காங் முதலான நாடுகளில் ‘கோல்’ மீனின் உறுப்புகள் மருத்துவ குணம் கொண்டவை எனவும், மருந்து நிறுவனங்கள் அதனைப் பயன்படுத்துவதாகவும், ஒயினைச் சுத்திகரிக்க இதனைப் பயன்படுத்தலாம் எனவும், இந்த மீனின் உறுப்புகள் கிட்னியில் கல் இருந்தால் குணமாக உதவும் எனவும், அதன் இதயம் பாலியல் ஆற்றலையும், நோய் எதிர்ப்புச் சகதியையும் அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள மற்றொரு மீனவரான ஜிதேந்திரா பாடில் என்பவர் “சமீப ஆண்டுகளில் மீன்களின் வரத்து குறைந்துள்ளன. கரையோரத்தில் நிகழும் நீர் மாசு இதற்குக் காரணமாக இருக்கிறது. அதனால் அரேபியக் கடலின் உள்ளே சென்று மீன் பிடிக்க வேண்டியதாக இருக்கிறது. மிக அதிசயமாக எப்போதாவது ஒன்று அல்லது இரண்டு ‘கோல்’ வகை மீன்களைப் பிடிக்க முடியும். எனக்குத் தெரிந்த ஒரு மீனவர் ஒரு முறை ஒரு டஜன் ‘கோல்’ மீன்களைப் பிடித்ததாகக் கேள்விப்பட்டேன். ஆனால், ஒரே பிடியில் 157 மீன்கள் என்பது இறைவனின் ஆசி” என்று தெரிவித்துள்ளார்.