மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, பாஜக ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகின்றன. இச்சூழலில், 13 பேர் கொண்ட குழுவை அமைத்து, மாற்று மத மற்றும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகளின் விவரங்களை சேகரிக்க அம்மாநில அரசு முடிவு செய்திருந்தது. 


ஷ்ரத்தா வால்கர் சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மகாராஷ்டிரா பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா தெரிவித்திருந்தார். 


மகாராஷ்டிரா அரசு பிறப்பித்த உத்தரவின்படி, மாவட்ட அதிகாரிகளுடன் வழக்கமான கூட்டங்களை நடத்தி, பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத மாற்று மத மற்றும் சாதி மறுப்பு திருமணங்கள் பற்றிய தகவல்களை இக்குழு சேகரிக்கவிருந்தது.


இதற்காக, மகாராஷ்டிரா பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா தலைமையில் 13 பேர் கொண்ட குழுவை பாஜக அரசு அமைத்திருந்தது.


இந்நிலையில், எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, சாதி மறுப்பு தம்பதிகளை தவிர்த்து மாற்று மத தம்பதிகளை மட்டும் இக்குழு கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுதொடர்பாக தற்போது வெளியிடப்பட்ட அரசாணையில், குழுவின் பெயர் மாற்று மத திருமண-குடும்ப ஒருங்கிணைப்பு குழு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


அதன்படி, கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு உதவி எண் அளிக்கப்பட உள்ளது. பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத மாற்று மத தம்பதிகளை இக்குழு கண்காணிக்க உள்ளது.


முன்னதாக, இது, தேவையற்ற குழு என்றும் பிற்போக்கான நடவடிக்கை என்றும், மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை உளவு பார்க்க ஏக்நாத் ஷிண்டே-தேவேந்திர ஃபட்னாவிஸ் அரசுக்கு உரிமை இல்லை என்றும் தேசியவாத காங்கிரஸ் விமர்சனம் செய்தது.


மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து விலகி இருக்குமாறு மாநில அரசை கேட்டுக் கொள்வதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினரும் அமைச்சருமான ஜிதேந்திர அவாத் தெரிவித்திருந்தார்.


இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "சாதி/மத மறுப்பு திருமணங்களைத் தடுக்கும் கமிட்டியின் இந்தக் குப்பை குழு எதற்கு? யார் யாரை திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதை உளவு பார்க்க அரசு யார்?


தாராளவாத மனோபாவம் கொண்ட மகாராஷ்டிராவில் இது ஒரு பிற்போக்கான முடிவு. குமட்டல் நடவடிக்கை. எந்த வழியில் முற்போக்கான மகாராஷ்டிரா செல்கிறது. மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து விலகி இருங்கள்" என பதிவிட்டிருந்தார்.


முன்னதாக, இதுகுறித்து ஆங்கில செய்திதாள் ஒன்றுக்கு விரிவாக பேட்டி அளித்த லோதா, "ஷ்ரத்தா வால்கர் சம்பவம் மீண்டும் நடக்காமல் இருப்பதற்காகவே மாநில அரசு இந்தக் குழுவை அமைத்துள்ளது.


ஷ்ரத்தா வாக்கரின் விஷயத்தில், அவர் ஆறு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் என்பது அவரது குடும்பத்தினருக்குத் தெரியாது. இதை கேட்கவே பயமாக இருந்தது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறுவதை நாங்கள் விரும்பவில்லை. 


விவாகரத்துக்குச் செல்லும் தம்பதிகள் ஒன்றாக வாழ்வதற்கான சாத்தியமான வழிகளை ஆராய்வதற்கு நாங்கள் ஆலோசனை வழங்குவது போல, குடும்பத்தை விட்டுப் பிரிந்த பெண்களுக்கு மீண்டும் தொடர்பைத் தொடர குழு ஆலோசனை வழங்கும்" என்றார்.