தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை விரும்பும் பெற்றோர்கள் முதல் அடுத்த தலைமுறை தொழில்நுட்ப ஆர்வலர்கள் வரை தங்கள் வாழ்வின் அடுத்தகட்டத்தை நோக்கி நகர நினைக்கும் யாருக்கும் பைஜுஸ் கல்வி வழிகாட்டி நிறுவனம்.

  


2011-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பைஜூஸ் பெங்களூருவைத் தளமாகக்கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனம், அதன் கற்றல் செயலியை 2015 இல் அறிமுகப்படுத்தியது. விரைவில் இந்தியாவின் மிகப்பெரிய கல்வி தொழில்நுட்ப நிறுவனமாக மாறியது. ஆனால் நிறுவனத்தின் வளர்ச்சியின் பின்னால் மிகப்பெரிய சுரண்டல் நிகழ்ந்துள்ளதாக அதன் ஊழியர்கள் பலர் புகார் எழுப்பியுள்ளனர். 


பைஜூஸ் பணியாளர்கள், அதன் வெற்றியானது தவறான சுரண்டலான வேலைச் சூழல் மற்றும் நேர்மையற்ற விற்பனை நடைமுறைகள் ஆகியவற்றால் உருவானதாகப் புகார் எழுப்பியுள்ளார்கள். அதன் கல்வித் தொழில்நுட்பங்களை விற்பனை செய்வதற்காக ஏழ்மையான குடும்பப் பின்னனியைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்துத் தனது விற்பனையாளர்களை ஏவுவதாகவும் அதன் ஊழியர்களிடமிருந்து புகார் எழுந்துள்ளது. 




அதுவும் குறிப்பாக சில மேலாளர்கள் தங்கள் இலக்கினை எட்ட கருணையற்ற வகையில் ஊழியர்களை நடத்துவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பைஜூஸில் தற்போது பணியாற்றும் 18 ஊழியர்கள் மற்றும் அங்கிருந்து வெளியேறிய 8 முன்னாள் ஊழியர்கள் ஆகியோரை சர்வே செய்ததில் சில உண்மைகள் வெளியாகி உள்ளது.





அவர்கள் அனைவரும் தாங்கள் அதிக நேரம் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், சில நேரங்களில் உடல் ரீதியாக சொற்களாலும் தாக்குதலுக்கு ஆளானதாகவும் அவர்களிடமிருந்து புகார் எழுந்துள்ளது. சில ஊழியர்கள் வாரத்துக்கு 72 மணிநேரங்கள் வரை பணியாற்றியுள்ளனர். இதுதவிர 22 க்ளையண்ட்களிடம் எடுக்கப்பட்ட பேட்டியில்  தாங்கள் வலுக்கட்டாயமாக பைஜூஸின் திட்டத்தில் இணைக்கப்பட்டதாகவும் இதற்காக வங்கியில் தாங்கள் கடன் வாங்க வேண்டியிருந்ததாகவும் ஒரு கட்டத்துக்கு மேல் பணம் செலுத்தமுடியாத சூழலில் பணம் செலுத்திய பிறகும் பின்வாங்க நேர்ந்ததாகவும் அவர்கள் புகார் கூறியுள்ளனர். இதுபற்றி முகநூலில் ஒரு ஊழியர் குறிப்பிட்டிருந்த நிலையில் இதுவரை அந்த நிறுவனம் இதுதொடர்பாக எந்தவித விளக்கமும் தர முன்வரவில்லை.


ஃபிஃபா உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டிகளுக்கு நடுவே அந்த நிறுவனம் அண்மையில்தான் கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸியை தங்களது நிறுவன விளம்பரத்துக்காக இணைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.