கிரிப்டோ கரன்சி மூலம் நிறைய முறை கேடுகள் நடப்பதாக எழுந்த பிரச்னையால் தனியார் கிரிப்டோ கரன்சியை தடை செய்யும்  சட்ட மசோதாவை நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் அதனால் பணத்தை இழந்த செய்திகள் அதிகரித்து தான் வருகின்றன. கிரிப்டோ கரன்சி ஊழல் என்று பெரிதும் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில். நிறைய பேர் வெளியில் சொல்லாமல் பயந்துகொண்டும் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் செய்கின்றனர். அப்படி பிட்காயின் வர்த்தகத்தில் பணத்தைத் இழந்த  மகாராஷ்டிர தொழிலதிபர் ஒருவர் தனது குடும்பத்தினரிடம் தன் இமேஜை காப்பாற்றி கொள்வதற்காக கொள்ளையடிப்பதாக போலிக் கதையை உருவாக்கி இருக்கிறார். போலீசார் இந்த விஷயத்தை விசாரித்த பிறகு உண்மையான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் உண்மையில் கிரிப்டோ சந்தையில் போட்ட அனைத்து பணத்தையும் இழந்துவிட்டார் என்பதைக் கண்டறிந்தனர்.



மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் வசிக்கும், சுமந்த் லிகாயத் என்ற ரகசிய கிரிப்டோ ஆர்வலர் பிட்காயின் வர்த்தகத்தின் போது ரூ.10 லட்சத்தை இழந்ததாகக் கூறப்படும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனது மகளின் திருமணத்திற்காக 10 லட்சம் பணத்தைச் சேமித்து வைத்திருந்த லிகாயத், ஒரு பேராசையில் பிட்காயினில் போட்டுள்ளார். பிட்காயினில் பணம் அதிகரித்தால் திருமணத்திற்கு முன்னர் விற்று விடலாம் என்று வாங்கியிருக்கிறார். ஆனால் தகுந்த வழிகாட்டுதல் இன்றி வர்த்தகம் செய்து மொத்த பணத்தையும் இழந்ததால் 10 லட்சம் பணத்தை இழந்துள்ளார். அதனை சொன்னால் அவரை பற்றி என்ன நினைப்பார்களோ என்று, தனது குடும்பத்தாரிடம் உண்மையை வெளிப்படுத்த பயந்து, தனது குடும்பத்தின் அனுதாபத்தைப் பெறுவதற்காக கொள்ளையடிக்கப்பட்டது என்ற போலிக் கதையைக் கொண்டு வர முடிவு செய்திருக்கிறார்.



லிகாயத்தின் மகளின் திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், மளிகைப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களைக் வாங்க லிகாயத் திருமணத்திற்குச் செலவு செய்ய பணம் இல்லாமல் தவித்தார். வேறு வழியின்றி, வாசை காவல் நிலையத்தை அணுகிய அந்த நபர், திங்கள்கிழமை மதியம், பணம் இருந்த பையைப் பறித்துக்கொண்டு, அடையாளம் தெரியாத நபர் 10 லட்சம் பணத்தை திருடி இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார் சென்றுவிட்டதாகக் கூறி புகார் அளித்துள்ளார். அதன் பேரில் கொள்ளை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் புகாரில் உண்மை இல்லை என முடிவுக்கு வந்தனர். இது போன்று பொய் வழக்குகள் போடக்கூடாது என்று எச்சரித்து விட்டு சென்ற போலீசார் தொழிலதிபர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.