கேரளாவில் கார் விபத்தில் மரணமடைந்த இரண்டு பெண்கள் (அழகிப் போட்டியில் வென்றவர்கள்) வழக்கில் மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆன்ஷி கபீர், அஞ்சனா ஷாஜனு என்ற இரண்டு மாடல் அழகிகள் சென்ற காரைப் பின்தொடர்ந்த ஆடி சொகுசு கார் வாகனத்தின் டிரைவர்  போதைப் பொருள் கடத்தல் கும்பலிடம் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கை குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறைக்கு மாற்றி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.  


விபத்து நடந்த போது நடத்தப்பட்ட விசாரணையின்படி, கார் சென்றுகொண்டிருக்கும் குறுக்கே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க காரை வேகமாக திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் முழுவதுமாக சேதமடைந்து சம்பவ இடத்திலேயே இரண்டு பெண்களுக்கும் உயிரிழந்ததாக கூறப்பட்டது.   




ஹோட்டல் மர்மம்:


ஆனால் தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் சென்ற வாகனத்தை, ஆடி சொகுசு கார் ஒன்று பலவந்தமாக துரத்தியதாகவும், அதிலிருந்து தப்பிக்கும் முயற்சியிலேயே இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் தற்போது அறிய வருகிறது. ஆடி சொகுசு காரை ஓட்டி வந்த சைஜு தங்கச்சன் கொச்சியில் செயல்பட்டு வரும் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் நேரடி தொடர்பில் இருந்ததை காவல்துறை கண்டறிந்துள்ளனர்.  கொச்சியில் செயல்பட்டு வரும் No 18 Hotelல் ( உயரிழந்த இரண்டு பெண்கள் கடைசியாக சென்று வந்த ஹோட்டல்), போதை மருந்து கைமாற்றப்பட்டு வருவதாக, கடந்த மே மாதமே மாநில காவல்துறை ஆணையருக்கு உளவுத்துறை அறிக்கையளித்தது. 


இந்த அறிக்கையில்  சைஜுவின் படங்களும் இணைக்கப்பட்டிருந்தன. இருப்பினும், விடுதியின் உரிமையாலாரான ராய் சில ஐபிஎஸ் அதிகாரிகளுடன் கொண்டிருந்த நெருக்கம் காரணமாக, தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை கேரள காவல்துறை மேற்கொள்ளவில்லை என்று தெரிய வருகிறது. விபத்துக்கு முன்னதாக No.18 விடுதியில், விஐபிகள் மட்டும் கலந்து கொள்ளும் போதை விருந்து நடைபெற்றிருக்கிறது. இதை ஏற்பாடு செய்திருந்த சைஜு, ஆன்ஷி கபீர், அஞ்சனா ஷாஜனுவை பலவந்தமாக விருந்துக்கு அழைத்துள்ளார். இந்த அழைப்பை அவர்கள் முற்றிலுமாக மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த சச்சரவுக்குப் பிறகு, இரண்டு பெண்களுகும் காரில் இருந்து அவசர அவசரமாக புறப்பட்டு சென்றிருக்கின்றனர். அவர்களை, வலுகட்டாயமாக ஆடி சொகுசு கார் ஒன்றில் சைஜு பின்தொடர்ந்துள்ளனர். ஒருகட்டத்தில் காரின் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதாக தெரிய வருகிறது. 




ஹார்ட் டிஸ்க்:
அனைத்து கேள்விக்கும் விடையளிக்கும் என எதிர்பார்க்கப்படுவது ஹோட்டலின் சிசிடிவி காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க். ஆனால் தொடக்கம் முதலே சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டும்  ஹார்ட் டிஸ்க், ஹோட்டலின் பின்புறமும் உள்ள குளத்தில் வீசப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தண்ணீரில் மூழ்கும் வீரர்கள் தற்போது குளத்தில் வீசப்பட்ட ஹார்ட் டிஸ்கை தண்ணீருக்குள் தேடி வருகின்றனர். ஹார்ட் டிஸ்க் கிடைத்தால் அதில் இருந்து எதாவது தகவலை மீட்க முடியுமா என போலீசார் யோசிப்பதாக தெரிகிறது. ஆனால் பல நாட்கள் ஆகிவிட்ட நிலையில் ஹார்ட் டிஸ்க் தேடுதல் பயனளிக்காத ஒன்று எனவும் நீர்மூழ்கி வீரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


தொடரும் மர்மம்:
அதிகாலை விபத்தாக தொடங்கிய அழகிகளின் மரண வழக்கு பாலோ செய்யப்பட்ட கார், போதைப்பொருள் வழக்கு, காணாமல் போன ஹார்ட் டிஸ்க் என அடுத்தடுத்த மர்மங்களுடன் பயணிக்கிறது. விரைவில் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு உண்மை கண்டுபிடிக்கப்பட வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.