மகாராஷ்டிர மாநிலம் வர்தா மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் இருந்து 11 சிசுக்களின்  மண்டை ஒடு மற்றும் 54 எலும்பு துண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கேட்போரை நிலைகுலைய செய்துள்ளது. 


சட்டவிரோத கருக்கலைப்பு தொடர்பான மற்றொரு வழக்கில், இந்த தனியார் மருத்துவமனையை சோதனையிடும் போது இந்த குற்ற சம்பவத்தை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.     


இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "  அர்வி தாலுக்காவில் செயல்பட்டு வரும் இந்த தனியார் மருத்துவமனையில்  சட்டவிரோத கருக்கலைப்பு மேற்கொள்ளப்படுவதாக சந்தேகங்கள் எழுந்தது.  மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு  உயிரி-எரிவாயு மையத்தில் சோதனையிட்ட போது, 11 சிசுக்களின்  மண்டை ஒடு மற்றும் 54 எலும்பு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவைகள், சட்டவிரோதமாக புதைக்கப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்" என்று தெரிவித்தார். 


அர்வி காவல்துறை இன்ஸ்பெக்டர் இதுகுறித்து கூறுகையில், "பாலியல் வன்முறை காரணமாக 13வயது சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இந்த சிறுமிக்கு சட்டவிரோத கருக்கலைப்பு செய்தது தொடர்பாக,2022, ஜனவரி, 9 அன்று மருத்துவர் ரேகா கடம் என்பவரும், செவிலியர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். 


மேலும், இந்த வழக்கில் குற்றவாளியின் பெற்றோர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கருகலைப்பு செய்யச் சொல்லி பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தை, குற்றவாளி சிறாரின் பெற்றோர் மிரட்டியுள்ளனர். மேலும், பொது சமூகத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தலை நிமிர்ந்து வாழ முடியாதவாறு செய்து விடுவதாகவும் பயம் காட்டியுள்ளனர். சமூகத்தில் இருந்து எழும் களங்கத்திற்கு அஞ்சி சிறுமியின் குடும்பத்தினர் கருகலைப்புக்கு இசைவு கொடுத்தாக அறியப்படுகிறது" என்று தெரிவித்தார்.  


 


                                   


 


பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.  சிறார் நீதி சட்ட விதிமுறைகள் படி இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.  


மருத்துவமனையில் கண்டெடுக்கப்பட்ட சிசுக்களின் மண்டை ஓடு மற்றும் எலும்புக் கூடுகள் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். மேலும், இந்த சம்பவம் எந்தவிதமான ஆவணங்களையும், உரிய விளக்கங்களையும் மருத்துவமனை சார்பில் இதுவரை அளிக்கப்படவில்லை என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவிகின்றனர்.