மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் உள்பட 99 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.


எதிர்பார்ப்பை கிளப்பும் மகாராஷ்டிரா தேர்தல்: 


மக்களவை தேர்தலை தொடர்ந்து அடுத்தடுத்து சட்டப்பேரவை தேர்தல்கள் நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் இந்தியா கூட்டணியும் ஹரியானாவில் பாஜகவும் வெற்றி பெற்றது. இதற்கு அடுத்தபடியாக, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.


ஜார்க்கண்டில் இரண்டு கட்டமாக நவம்பர் 13 மற்றும் 20ஆம் தேதியும் மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நவம்பர் 20ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ள மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள தேர்தல் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜக கூட்டணியும் இழந்த செல்வாக்கை மீட்டெடுத்து மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றியை தொடரவும் காங்கிரஸ் கூட்டணி முயற்சி செய்து வருகிறது. ஒருபுறம் பாஜக கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளது.


பாஜகவின் கேம் பிளான் என்ன?


அதற்கு எதிராக காங்கிரஸ் கூட்டணியில் உத்தவ் தாக்கரே சிவசேனாவும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளது. பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டது. மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளில் 160 இடங்கள் வரை பாஜக போட்டியிடலாம் என கூறப்படுகிறது.


இந்த நிலையில், பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. 99 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.


நாக்பூர் மேற்கு தொகுதியில் பட்னாவிசும் கம்தி தொகுதியில் சந்திரசேகர் பவான்குலேவும் போட்டியிடுகின்றனர். மாநில அமைச்சர் சுதிர் முங்கண்டிவார், பல்லார்பூர் தொகுதியிலும், மத்திய அமைச்சர் ராவ்சாகேப் தன்வேயின் மகன் சந்தோஷ், போகர்தான் தொகுதியிலும் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர்.


போகர் தொகுதியில் ஸ்ரீஜெயா சவானை களமிறக்கியுள்ளது பாஜக. மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அசோக் சவானின் மகள்தான் ஸ்ரீஜெயா சவான் ஆவார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு கட்சி மாறிய அசோக் சவான், தற்போது ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார்.