மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 85 தொகுதிகளில் போட்டியிட உள்ளன. மீதமுள்ள 33 தொகுதிகளில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிற கட்சிகள் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


அதிரடி காட்டும் இந்தியா கூட்டணி:


மக்களவை தேர்தலை தொடர்ந்து அடுத்தடுத்து சட்டப்பேரவை தேர்தல்கள் நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் இந்தியா கூட்டணியும் ஹரியானாவில் பாஜகவும் வெற்றி பெற்றது. இதற்கு அடுத்தபடியாக, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.


ஜார்க்கண்டில் இரண்டு கட்டமாக நவம்பர் 13 மற்றும் 20ஆம் தேதியும் மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நவம்பர் 20ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ள மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள தேர்தல் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜக கூட்டணியும் இழந்த செல்வாக்கை மீட்டெடுத்து மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றியை தொடரவும் காங்கிரஸ் கூட்டணி முயற்சி செய்து வருகிறது. ஒருபுறம் பாஜக கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளது.


விட்டுகொடுத்தாரா ராகுல் காந்தி?


அதற்கு எதிராக காங்கிரஸ் கூட்டணியில் உத்தவ் தாக்கரே சிவசேனாவும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளது. பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த நிலையில், இந்தியா கூட்டணியிலும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.


அதன்படி, காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 85 தொகுதிகளில் போட்டியிட உள்ளன. மீதமுள்ள 33 தொகுதிகளில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிற கட்சிகள் போட்டியிடுகிறது.


முன்னதாக, இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீட்டில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் இதன் காரணமாக உத்தவ் தாக்கரே அதிருப்தில் இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், இறுதியில், ராகுல் காந்தி தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைத்ததாக கூறப்படுகிறது.


குறிப்பாக, விதர்பா பகுதியில் தொகுதிகளை பகிர்ந்து கொள்வதில் காங்கிரஸ் மாநில தலைவர்களுக்கும், உத்தவ் சிவசேனா இடையேயும் பிரச்னை நீடித்து வந்ததாக சொல்லப்பட்டது.