எக்ஸ் தளத்தின் மூலம் விமானங்களுக்கு பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு, அது பரப்பப்பட்டதாத எக்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகளை மத்திய அரசு கடிந்து கொண்டுள்ளது.

  


கடந்த சில நாள்களாகவே விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது தொடர் கதையாகி வரும் நிலையில், ஒரே வாரத்தில் மொத்தம் 100 விமானங்களுக்கு மேல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


வெடிகுண்டு மிரட்டல்களுக்கும் X தளத்திற்கு என்ன தொடர்பு? இந்த நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சங்கேத் பாண்ட்வே, விமான நிறுவனங்கள், எக்ஸ் மற்றும் மெட்டா போன்ற சமூக ஊடகத் தளங்களின் பிரதிநிதிகளுடனான மெய்நிகர் சந்திப்பில் கலந்து கொண்டார்.


எக்ஸ் தளம் வழியாக பொய்யான வெடிகுண்டு மிரட்டல்கள் பரப்பப்பட்டதாகவும் இதன் வழியாக குற்றத்திற்கு எக்ஸ் தளம் உடந்தையாக இருந்ததாகவும் மத்திய அரசின் சார்பில் கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதுபோன்ற ஆபத்தான வதந்திகள் பரவாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதன் பிரதிநிதிகளிடம் மத்திய அரசு சார்பில் கேள்வி எழுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


கடந்த வாரத்தில், டெல்லி-சிகாகோ ஏர் இந்தியா விமானம், தம்மம் - லக்னோ இண்டிகோ விமானம், அயோத்தி-பெங்களூரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், தர்பங்காவிலிருந்து மும்பைக்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் (SG116), பாக்டோக்ரா பெங்களூரு (QP 1373) அலையன்ஸ் ஏர் விமானம், அமிர்தசரஸ்-டேராடூன்-டெல்லி விமானம் (9I 650), ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (IX 684), மதுரை - சிங்கப்பூர் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.


தொடரும் பதற்றம்: ஒரே வாரத்தில் மொத்தம் 120 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று கூட இண்டிகோ, விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களின் 30 விமானங்களுக்கு இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன.


இந்த சூழலில், முறையான நடைமுறைகளைப் பின்பற்றியதாகவும் அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதாகவும் விமான நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன. 


வெடிகுண்டு மிரட்டல் குறித்து புரளி கிளப்புபவர்கள் விமானத்தில் செல்ல தடை விதிக்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு எச்சரித்திருக்கிறார். பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் முன்னுரிமையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


மிரட்டல்கள் வர தொடங்கியதில் இருந்து சம்பந்தப்பட்டவர்களுடன் பல சந்திப்புகளை மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டன. விமான (பாதுகாப்பு) விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.