மகாராஷ்ட்ராவின் தற்போதைய அரசியல் நெருக்கடி சூழலில், மாநிலத்தின் துணை முதல்வர் அஜித் பவார் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இவர் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் அஜித் பவார் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


மகாராஷ்ட்ரா மாநிலத்தின் துணை முதல்வரும், நிதியமைச்சருமான அஜித் பவார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், `கொரோனா தொற்றுக்காக பரிசோதனை செய்ததில் எனக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நான் நலமாக இருப்பதோடு, என் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று வருகிறேன். உங்கள் ஆசியுடன் விரைவில் கொரோனாவை எதிர்கொண்டு, மீண்டும் பணிக்குத் திரும்புவேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளார். 







கடந்த வாரம், மகாராஷ்ட்ராவின் முதல்வர் உத்தவ் தாக்கரே, ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதோடு, ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று வீடு திரும்பியுள்ளார். 


மகாராஷ்ட்ராவின் சிவ சேனா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் சிலர் ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைந்து, கட்சியின் தலைமையை எதிர்த்து வருவதோடு, பாஜக ஆளும் அசாம் மாநிலத்தின் விடுதி ஒன்றில் தங்கி வருவதோடு, மகாராஷ்ட்ராவின் ஆளும் கூட்டணியின் ஆட்சியின் நிலைமையைக் கேள்விக்குறியாக்கியுள்ளானர். 


ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிவ சேனா கட்சி மகா விகாஸ் அங்காடி என்றழைக்கப்படும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடனான கூட்டணியை முறித்துவிட்டு, மகாராஷ்ட்ராவின் பாஜகவுடன் கூட்டணியில் இணைய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். 


இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி மகா விகாஸ் அங்காடி கூட்டணியில் இடம்பெறும் எனவும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அதற்கேற்ப பணியாற்ற வேண்டும் எனவும், சிவ சேனா கட்சிக்குள் எழும் எதிர்ப்பு என்பது உள்கட்சி விவகாரம் என்றும் தெரிவித்திருந்தார். 



மகாராஷ்ட்ராவின் துணை முதல்வர் அஜித் பவார் கடந்த வாரம் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த போது, `மகா விகாஸ் அங்காடிக் கூட்டணி ஐந்தாண்டுகளுக்குத் தொடரும். இதுவே எங்கள் நிலைப்பாடு. எம்.எல்.ஏக்களுடன் எப்போதும் இருந்துள்ளோம். அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்துள்ளோம்.. இங்கு அரசு நிலையாக இருக்கும்.. அனைத்து எம்.எல்.ஏக்களும் இணைந்து பணியாற்ற வேண்டும்.. நான் எந்த எம்.எல்.ஏவின் பணியிலும் தலையிட்டதில்லை’ எனக் கூறியிருந்தார். 


இந்த விவகாரத்தில் பாஜக தலையீடு குறித்து அவரிடம் கேட்ட போது, `இதுவரை எந்த பாஜக தலைவரும் இந்த விவகாரத்தின் முன்னணியில் இருந்து பணியாற்றவில்லை’ எனக் கூறியிருந்தார்.