BJP Minister: அமைச்சர் தனஞ்ஜெய் முண்டேவை பதவியை ராஜினாமா செய்யுமாறு மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னாவிஸ் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
அமைச்சர் ராஜினாமா..
மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் தனஞ்ஜெய் முண்டேவை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது. அதனடிப்படையில், தனஞ்ஜெய் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உணவு மற்றும் சிவில் விநியோகத் துறைகளை அவர் கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் மாதம் பீட் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி தலைவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது நெருங்கிய உதவியாளர் வால்மிக் கரட் கைது செய்யப்பட்டதை அடுத்து, தனஞ்ஜெய் முண்டே ராஜினாமா செய்துள்ளார். பீட் மாவட்டத்தில் உள்ள பார்லியைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வான இவர், பீட்டின் பொறுப்பு அமைச்சராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடந்தது என்ன?
சந்தோஷ் தேஷ்முக் எனப்படும் ஊராட்சி தலைவரின் கொடூர கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையில் இருந்து புதிய படங்கள் வெளிவந்த ஒரு நாள் கழித்து, கொலையின் காட்டுமிராண்டித்தனத்தைக் காட்டும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் முண்டேவின் பெயர் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் இந்தக் கொடூரமான கொலையின் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் காரட்டுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்பதால் அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
கொலை விவரங்கள்:
பீட்டில் உள்ள மசாஜோக் கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் தேஷ்முக், கடந்த ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். மாவட்டத்தில் உள்ள ஒரு எரிசக்தி நிறுவனத்தை குறிவைத்து மிரட்டி பணம் பறிக்கும் முயற்சிகளைத் தடுக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக இது நடந்ததாகக் கூறப்படுகிறது.
பிப்ரவரி 27 ஆம் தேதி, தேஷ்முக்கின் கொலை மற்றும் தொடர்புடைய இரண்டு வழக்குகள் தொடர்பாக பி்ட் மாவட்ட நீதிமன்றத்தில் 1,200 பக்கங்களுக்கு மேல் விரிவான குற்றப்பத்திரிகையை மாநில குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) சமர்ப்பித்தது.
பீட்டில் உள்ள கெஜ் காவல் நிலையம், ஊராட்சி மன்ற தலைவர் கொலை, அவாடா நிறுவனத்திடமிருந்து மிரட்டி பணம் பறிக்க முயற்சித்தல் மற்றும் நிறுவனத்தின் பாதுகாவலர் மீதான தாக்குதல் ஆகிய மூன்று தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது அதிகாரிகள் கடுமையான மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை (MCOCA) அமல்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக, இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.