கடந்த 2019ஆம் ஆண்டு, கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது மோடி குறித்து ராகுல் காந்தி தெரிவித்த கருத்து அவரின் அரசியல் வாழ்க்கையையே புரட்டிபோட்டுள்ளது. அவதூறாக பேசியதாகக் கூறி, ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்துள்ளது சூரத் நீதிமன்றம்.
இந்த விவகாரம், இந்திய அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இதையடுத்து, தகுதி நீக்கம் குறித்து செய்தியாளர்களிடம் விரிவாக பேசிய ராகுல் காந்தி, "ஒரு முறை அல்ல, நிரந்தரமாக என்னைத் தகுதி நீக்கம் செய்தாலும் கேள்வி கேட்பதை நான் நிறுத்தப்போவதில்லை. மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, காந்தி.
நான் பேசுவதைக் கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார். அதானி பற்றி நான் பேசும்போது, அவரின் கண்களில் பயத்தைப் பார்த்தேன். பிரதமரின் அச்சத்தை திசை திருப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனக்கு உண்மையைப் பேசுவதில் மட்டுமே விருப்பம் உள்ளது. அதை தொடர்வேன்" என்றார்.
ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுத்த ஏக்நாத் ஷிண்டே:
இந்நிலையில், சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி பேசியதற்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எதிர்ப்பு தெரிவித்தது மட்டும் இன்றி அவர் வெளிப்படையாக மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ராகுல் காந்தி இதுபோன்று தொடர்ந்து பேசினால் அவர் தெருவில் நடமாடுவது கடினமாகிவிடும் என ஏக்நாத் ஷிண்டே பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் ராகுல் காந்தி குறித்து பேசிய ஏக்நாத் ஷிண்டே, "சாவர்க்கர் மகாராஷ்டிராவின் தெய்வம் மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் தெய்வம். ஆனால், ராகுல் காந்தி அவரை அவதூறாகப் பேசியுள்ளார். ராகுல் காந்தியின் இந்த செயலுக்கு அவரைப் பற்றிய எந்த விமர்சனமும் குறைவாகவே இருக்கும்.
மன்னிப்பு கேட்பதற்கு தான் ஒன்றும் சாவர்க்கர் இல்லை என்று கூறியுள்ளார். சாவர்க்கரைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார்? இதற்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும்.
சாலையில் நடக்க முடியாது:
காங்கிரஸ் இயற்றிய சட்டத்தின் மூலம் ராகுல் காந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். லாலு பிரசாத் யாதவ் மற்றும் பலர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் ஆனால், அப்போது இதுபோன்றும் எதுவும் நடக்கவில்லை. அப்போது ஜனநாயகம் ஆபத்தில் இருக்கவில்லையா?
ராகுல்காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்தது மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஓபிசி சமூகத்தையும் அவதூறாகப் பேசியுள்ளார். தொடர்ந்து அதே தொனியில் பேசி வருகிறார். தொடர்ந்து பேசினால், சாலையில் நடக்கவே சிரமமாக இருக்கும் என்பதை அவருக்கு சொல்ல விரும்புகிறேன்" என்றார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பிரிவு 8(3)இன் கீழ், எம்பி ஒருவருக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் குற்ற தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில், அவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார். இந்த சட்டத்தின்படிதான், ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.