ஒவ்வொரு ஆண்டும், யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். ஆனால், 700 முதல் 1000 பேருக்கு மட்டுமே அவர்களின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் கனவு நிறைவேறுகிறது.
உடைந்து போன ஐஏஎஸ் கனவு: தீவிரமான பயிற்சிக்கு பிறகும், சிலருக்கு தங்களின் கனவு நிறைவேறுவதில்லை. இப்படிப்பட்ட சூழலில், சிலர், தற்கொலை என்ற தவறான முடிவை எடுக்கின்றனர். தேர்வில் தோல்வி அடைவதால் ஒவ்வொரு ஆண்டும் 2,500 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக தேசிய குற்றவியல் ஆவண காப்பக அறிக்கையில் கூறப்படுகிறது.
மாணவர்களின் தற்கொலைக்கு மன அழுத்தமே காரணம் என மருத்துவர்கள் கூறு வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி பழைய ராஜேந்திரா நகரில் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரும் மன அழுத்தத்தை தன்னால் சமாளிக்க முடியவில்லை என தற்கொலை கடிதத்தில் அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அந்த மாணவியின் தற்கொலை கடிதம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தற்கொலை கடிதத்தில் மாணவி உருக்கம்: யுபிஎஸ்சி தேர்வுக்கு தயார் செய்வதில் உள்ள மன அழுத்தம் குறித்தும் தங்கி படிக்கும் தனியார் விடுதிகளில் மாணவர்கள் சுரண்டலுக்கு உள்ளாவது பற்றியும் தற்கொலை கடிதத்தில் அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார். "மன்னிக்கவும், அம்மா, அப்பா. நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்.
பிரச்னைகள் மட்டுமே உள்ளது. அமைதியே இல்லை. இந்த மனச்சோர்விலிருந்து விடுபட நான் எல்லா வழிகளையும் முயற்சித்தேன். ஆனால், என்னால் அதை எதிர்கொள்ள முடியவில்லை" என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு மாணவியின் தோழி ஸ்வேதா, இதுகுறித்து பேசுகையில், "3 முறை தேர்வுகளை எழுதியுள்ளார். ஒவ்வொரு முறையும் கடுமையாக பயற்சி மேற்கொண்டார். ஆனால், தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. அவர் மீது அழுத்தம் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு சில மாதங்களுக்கும் இப்பகுதியில் வாடகை அதிகரித்து வருவதால் நிதி நெருக்கடி கூட ஏற்பட்டது" என்றார்.
இந்த மாணவி படித்த கோச்சிங் கிளாஸின் அடித்தளத்தில் வெள்ளம் புகுந்து மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். மாணவியின் தற்கொலை சம்பவம் குறித்து டெல்லி காவல்துறை விசாரணை செய்து வருகிறது. "இந்த சோகமான சம்பவத்திற்கு வழிவகுத்த இந்த விவகாரத்தின் விவரங்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்" என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.