பள்ளிக்கு செல்ல பெரும்பாலான மாணவர்கள் விரும்பும்போதிலும், ஆனால், சில மாணவர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. எதை சொல்லி விடுமுறை எடுக்கலாம் என யோசிப்பர். அந்த வகையில், பள்ளிக்கு போகாமல் கட் அடிக்க 14 வயது சிறுவன் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பள்ளிக்க செல்லாமல் இருக்க சிறுவன் அனுப்பிய மெயில்: டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றுக்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பின்னர் நடந்த விசாரணையில்தான், வந்த வெடிகுண்டு மிரட்டல் பொய்யானது என்றும் பள்ளிக்கு செல்லாமல் இருக்க அந்த பள்ளியில் படிக்கும் சிறுவனே இந்த செயலை செய்தது தெரிய வந்தது.


கைலாஷ் காலனியில் உள்ள சம்மர் ஃபீல்ட்ஸ் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை அன்று பள்ளியை வெடிக்கச் செய்ய போவதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது. உடனடியாக பள்ளியில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.


இதுகுறித்து பள்ளி முதல்வர் ஷாலினி அகர்வால் கூறுகையில், "இரவு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதை காலைதான் பார்த்தோம். வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மின்னஞ்சல் வந்த 10 நிமிடங்களில் மாணவர்களை வெளியேற்றிவிட்டோம்" என்றார்.


நடந்தது என்ன? இதுகுறித்து காவல்துறை தரப்பு பேசுகையில், "14 வயது மாணவர் அடையாளம் காணப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறான். அந்த மாணவர் பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை. எனவே, வெடிகுண்டு மிரட்டலை விடுத்துள்ளார். வெடிகுண்டு மிரட்டலை உண்மையானது போல் காட்ட மேலும் இரண்டு பள்ளிகளை மெயிலில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என தெரிவித்தது.


முன்னதாக, கடந்த மே மாதம் 2 ஆம் தேதி, டெல்லியில் மொத்தம் 131 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தன. டெல்லி - என்சிஆர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலில் 'Swaraiim' என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டிருந்தது. (கடந்த 2014ஆம் ஆண்டு முதல், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் பயங்கரவாதத்தை பரப்பும் நோக்கில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது)


அந்த சமயத்தில், உள்துறை அமைச்சகம் (எம்ஹெச்ஏ) அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. வந்த வெடிகுண்டு மிரட்டல் அனைத்து பொய்யானவை என அதில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.