நாடு முழுவதும் இன்று (ஆக.19) கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.


இந்தக் கிருஷ்ண ஜெயந்தி விழாவின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் மகாராஷ்டிராவில் களைகட்டும் திருவிழாக்களில் ஒன்று ’தஹி ஹண்டி’ எனப்படும் தயிர் பானை உடைக்கும் போட்டி.


வட்டமாக நின்று கோவிந்தாக்கள் என அழைக்கப்படும் நபர்கள் ஒருவர் தோல் மீது ஒருவர் பிரமிடுகள் அமைத்து ஏறி, உயரத்தில் தொங்கும் தயிர் பானையை உடைக்கும் இந்த சாகச விழா மிகவும் பிரசித்தம்.


 






 குறிப்பாக மும்பை, தானே பகுதிகளில் இவ்விழா களைகட்டும். 20 அடி முதல் 30 அடி வரை மனிதப் பிரமிடுகள் அமைத்து ஏறும் இந்த சாகச விளையாட்டில் கீழே விழுந்து காயங்களும் சமயங்களில் உயிரிழப்பும்கூட ஏற்படுவது உண்டு. எனினும் ஆண்கள், பெண்கள் என அனைவரும் தஹி ஹண்டியை உற்சாகமாக விளையாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.


இந்நிலையில் தஹி ஹண்டி விளையாட்டு மகாராஷ்டிர மாநில அரசின் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் இணைக்கப்படுவதாகவும், இனி ’ப்ரோ தஹி ஹண்டி’ போட்டிகள் நடத்தப்படும் எனவும் அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.


 






மேலும், தஹி ஹண்டியில் ஈடுபடும் கோவிந்தாக்கள் எனப்படும் வீரர்களுக்கு விளையாட்டு பிரிவுக்கான இட ஒதுக்கீட்டில் அரசு வேலைகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், இவர்களுக்கு 10 லட்ச ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.


 






கிருஷ்ணரின் குழந்தைப் பருவ குறும்பு செயல்களில் ஒன்றான வெண்ணெய் திருடும் செயலை அவரது பிறந்த நாளில் நினைவுகூறவும், மீள் உருவாக்கம் செய்யும் வகையிலும் இந்த சாகச விளையாட்டு கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.