அனைத்தும் தயார் செய்யப்பட்டுவிட்டது. தேதி குறிக்கப்பட்டுவிட்டது. துப்பாக்கி வெடிபொருள்கள் கூட தயார் செய்யப்பட்டுவிட்டது. எதற்கு தெரியுமா? விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள நெய்டா இரட்டைக் கோபுரத்தை இடிக்கத்தான். 


 






விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை கண்டறிந்து இடிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், உத்தரவுக்கு இணங்க, சூப்பர் டெக்கின் 40 மாடி நொய்டா இரட்டைக் கோபுரம், ஆகஸ்ட் 28 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு இடிக்கப்படும் என்பதால் குடியிருப்பாளர்கள் கட்டிடம் அமைந்துள்ள பகுதியில் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


ஏறக்குறைய 100 மீட்டர் உயரமுள்ள கட்டிடத்தை இடிக்கும் பணி ஆகஸ்ட் 21 ஆம் தேதி தொடங்க இருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் நொய்டா ஆணையத்தின் நீட்டிப்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 900க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள், 21 கடைகள்  நொய்டாவின் செக்டார் 93B இல் அமைந்துள்ள இரட்டை கோபுரத்தில் வரவிருந்தன.


கட்டிடத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் - எமரால்டு கோர்ட் மற்றும் ஏடிஎஸ் கிராமம் - ஆகஸ்ட் 28ஆம் தேதி காலை 7 மணிக்குள் வீடுகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குடியிருப்பாளர்கள், அதே நாளில் மாலை 4 மணிக்குப் பிறகுதான் வீடு திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


இரட்டைக் கோபுர கட்டிட அமைப்புகளின் நெடுவரிசைகள் மற்றும் துளையிடப்பட்ட 9,400 துளைகளில் சுமார் 3,500 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்கள் நிரப்பப்படும் என அலுவலர்கள் கூறியுள்ளனர். இந்த வார தொடக்கத்தில், வெடிபொருள்களை ஏற்றிச் செல்லும் பல லாரிகள் இடிக்க வேண்டிய பகுதிக்கு வந்ததைக் காண முடிந்தது.


இதுகுறித்து RWA சூப்பர்டெக்கின் தலைவர் உதய் குமார் தெவாடியா கூறுகையில், "மக்கள் பயப்படுகிறார்கள். ஆனால், நிபுணர்கள் அதை செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இங்கிலாந்தில் இருந்து நிபுணர்கள் கூட வரவழைக்கப்பட்டுள்ளனர். நாங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம். இந்த வெடிப்பின் தாக்கம் 50 மீட்டர் சுற்றளவில் உணரப்படும்" என்றார்.


கட்டிடம் இடிக்கும்போது இரு பகுதிகளில் இருந்தும் வாகனங்கள் அப்பகுதியில் அனுமதிக்கப்படாது. மீட்பு பணிகளின் போது, நொய்டா ஆணையம் அவர்களுக்கு பார்க்கிங் இடத்தை வழங்கும். இரட்டைக் கோபுரத்திற்கு அருகே உள்ள நொய்டா-கிரேட்டர் நொய்டா விரைவுச்சாலை, இடிக்கபோகும் தினம் அன்று பிற்பகல் 2:15 முதல் 2.45 வரை வாகனப் போக்குவரத்துக்காக மூடப்பட்டிருக்கும் என திட்டமிடப்பட்டுள்ளது.