மும்பை காவல்துறையில் பாம் ஸ்குவாடைச் சேர்ந்த மோப்ப நாய் ராணா உயிரிழந்தது. அதற்கு பயிற்றுனர்கள், காவலர்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்து காண்போரை நெகிழவைத்தது.


7 வயது ராணா:


ராணாவுக்கு வயது 7. லாப்ரடார் இனத்தைச் சேர்ந்த ராணாவின் மோப்ப சக்தி அபாரம் என்கின்றனர் அதனை பராமரித்த படையினர். 2016ல் பணியில் சேர்ந்த ராணா தனது பணிக் காலத்தில் வெகு சிறப்பாக செயல்பட்டது.  கடந்த ஜூலை 22 ஆம் தேதி ராணாவுக்கு உடல்நலன் குன்றியது. வயிறு உபாதைகள் காரணமாக ராணா மும்பை பாய் சக்கர்பாய் தீன்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பெற்றுவந்த ராணா 17ஆம் தேதி காலை 10.35 மணியளவில் உயிரைத் துறந்தது.


இறுதி மரியாதை:


ராணாவுக்கு முறையாக இறுதி மரியாதை செய்யப்பட்டது. ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்தால் எந்த மாதிரியான கார்ட் ஆஃப் ஹானர் பின்பற்றப்படுமோ அதே அளவிலான மரியாதை ராணாவுக்கும் வழங்கப்பட்டது. ராணாவுக்கு மும்பை காவல்துறை (நிர்வாகம்) இணை ஆணையர், வெடிகுண்டு நிபுணர் குழு மூத்த ஆய்வாளர் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.


ரிடயர்மென்ட்டுக்கு நடந்த கவுரவம்:


அண்மையில் சென்னை விமான நிலைய பாதுகாப்புப் பணியில் இருந்த மோப்ப நாய்க்கு ராஜ மரியாதையுடன் பணி ஓய்வு நாளில் பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்ட செய்தி வைரலானது நினைவில் இருக்கலாம்.


விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வெடிகுண்டு, வெடி பொருட்கள் உள்ளிட்டவற்றை விரைந்து கண்டறிய மோப்ப நாய்களை பயன்படுத்தி வருகின்றனர். முக்கியமாக மோப்ப நாய் ‘ராணி’யை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், கடந்த 10 ஆண்டுகள் 6 மாதங்கள் வரை சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி வந்தனர்.




இந்த ராணி என்ற நாய், விமான நிலையத்தில் துல்லியமாக மோப்ப சக்தியுடன் வெடிபொருட்களை கண்டுபிடிக்கக்கூடிய திறனுடையது. மேலும் பல அலுவலர்களிடம் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இவ்வாறு சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டு, கடந்த பத்து வருடங்களாக பணிபுரிந்து வந்த ராணி மோப்ப நாயின் வெற்றி பயணம் கடந்த 4 ஆம் தேதி (ஆகஸ்ட் 4) முடிவுக்கு வந்தது.


சென்னை பழவந்தாங்கலில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை அலுவலகத்தில் ராணி மோப்ப நாய்க்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற மோப்ப நாய் ராணிக்கு பதக்கம் மற்றும் மாலைகள் அணிவித்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.