மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத் உள்ளிட்ட இரண்டு நகரங்களின் பெயரை மாற்றும், மாநில அரசின் முடிவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மாநில அரசின் தீர்மானங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததன் மூலம், அவுரங்காபாத் நகரின் பெயர் சத்ரபதி சம்பாஜி நகர் என்றும், உஸ்மானாபாத் நகரின் பெயர் தாராஷிவ் என்றும் அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது.


பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல்:


குறிப்பிட்ட நகரங்களின் பெயரை மாற்றும் மாநில அரசின் முன்மொழிவுக்கு, உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பான அறிவிப்பில்,  ”மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் மற்றும் உஸ்மானாபாத் ஆகிய இரண்டு நகரங்களின் பெயர்களை மாற்றுவதற்கு மத்திய அரசுக்கு "ஆட்சேபனை இல்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மாநில  துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வரவேற்றதோடு, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு தான் இந்த உரிமையை பெற்றுக் கொடுத்ததாகவும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.


பெயர் மாற்றம் ஏன்?


அவுரங்காபாத் மற்றும் உஸ்மானாபாத் ஆகிய நகரங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை  மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே முதன்முதலில் முன்வைத்தவர். இந்தக் கோரிக்கையை சிவசேனா கட்சியினர் பல தசாப்தங்களாகக் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, 2022 இல் தனது அரசாங்கம் கவிழ்வதற்கு முன்பாக நடைபெற்ற தனது கடைசி அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தப் பெயர்களை மாற்ற முடிவு செய்தார். அதன்படி, அவுரங்காபாத் நகரின் பெயர் சத்ரபதி சம்பாஜி நகர் என்றும், உஸ்மானாபாத் நகரின் பெயர் தாராஷிவ் என்றும் மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.


கூட்டணி கட்சிகள் எதிர்ப்பா?


உத்தவ் தாக்ரேவின் இந்த முடிவு மகாவிகாஸ் கூட்டணியில் இருந்த, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் விரும்பவில்லை என கூறப்பட்டது. இதனிடையே, சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. அதைதொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவு, பாஜக உடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது.


அமைச்சரவையில் தீர்மானம்:


அவுரங்காபாத் மற்றும் உஸ்மானாபாத் நகரங்களின் பெயர்களை மாற்றுவதாக கடந்தாண்டு அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டாலும், இதுநாள் வரை மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்து. இந்நிலையில், மாநில அரசின் முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், அவுரங்காபாத் நகரின் பெயர் சத்ரபதி சம்பாஜி நகர் என்றும், உஸ்மானாபாத் நகரின் பெயர் தாராஷிவ் என்றும் மாற்றப்பட்டுள்ளது.