திருமணமாகாமல் சேர்ந்து வாழும் லிவ் - இன் முறை இந்திய சமூகத்திற்கு ஏற்றதல்ல, என உத்தரபிரதேச மாநில உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிரேக்-அப்பிற்கு பிறகு பெண்கள் தனியாக வாழ்வது கடினம் எனவும் வலியுறுத்தியுள்ளது.


வழக்கு விவரம்:


அலகாபத்தை சேர்ந்த ஜோடி, லிவ் - இன் முறையில் ஒன்றரை வருடங்கள் திருமணமாகமலேயே ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். அந்த பெண் கருவுற்ற நிலையில், அவரை திருமணம் செய்ய ஆண் நண்பர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த நபர் தன்னை  ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, குறிப்பிட்ட நபர் மீது பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றியது மற்றும் கற்பழிப்பு ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமின் கோரி குற்றம்சாட்டப்பட்ட நபர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.


வழக்கு விசாரணை:


சித்தார்த்தா எனும் நீதிபதி இந்த வழக்கை விசாரித்தார். அப்போது,  ஏற்கனவே அந்த பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தன்னுடன் தனிமையில் இருந்த ஆபாச புகைப்படங்களை தனது கணவருக்கு அந்த ஆண் நண்பர் அனுப்பியதாகவும், இதனால் தனது கணவர் தன்னை சேர்த்துக் கொள்ளவில்லை எனவும் வழக்கு தொடர்ந்த பெண் தரப்பில் வாதிடப்பட்டது.


”லிவ் - இன் உறவில் வந்தவர் ஒரு மேஜர்”:


தொடர்ந்து, ”மனுதாரார் 18 வயதை கடந்த மேஜர். அவரது சுய விருப்பத்தின் பேரிலேயே லிவ் - இன் உறவு முறையில் நுழைந்துள்ளார். லிவ் - இன் முறையின் பின் விளைவுகள் என்ன என்பதை உணரும் தகுதி வாய்ந்தாவ்ர், திருமணம் செய்து கொள்கிறேன் என உறுதியளித்து இந்த உறவுமுறை தொடங்கியதாக எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை” என குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதால், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஜாமின் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வழங்கப்பட்டது.


குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமின்:


இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,  ”குற்றம் சாட்டப்பட்டவர்களின் வக்கீல் முன்வைத்த வாதங்களில் நியாயம் உள்ளதாக கூறினார். அதோடு,  ”விசாரணையின் முடிவு தொடர்பான நிச்சயமற்ற தன்மை, காவல்துறையின் ஒருதலைப்பட்ச விசாரணை, குற்றம் சாட்டப்பட்ட தரப்பின் வழக்கைப் புறக்கணித்தல், குற்றம் சாட்டப்பட்டவரின் விரைவான விசாரணைக்கான அடிப்படை உரிமை மற்றும் பிற காரணிகளுடன் அரசியலமைப்பின் 21 வது பிரிவின் பெரிய ஆணை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஜாமின் வழங்குவதாக” நீதிபதி உத்தரவிட்டார்.


”அங்கீகரிக்கப்படாத லிவ் - இன்”:


அதோடு லிவ் - இன் குறித்து பேசிய நீதிபதி சித்தார்த்தா , “லிவ்-இன் உறவை முறித்துக் கொண்ட பிறகு, ஒரு பெண் தனியாக வாழ்வது கடினம். இத்தகைய உறவுகளை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இந்திய சமூகத்தின் பெரும்பகுதி அங்கீகரிக்கவில்லை. எனவே, அந்தப் பெண்ணுக்கு, தற்போதைய வழக்கைப் போலவே, தனது லிவ்-இன் பார்ட்னருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதைத் தவிர வேறு வழியில்லை" என கூறினார்.