மகாராஷ்டிராவில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்த விபத்தில், பலியான 17 பேரில் இருவர் தமிழகர்கள் என தெரிய வந்துள்ளது.
கிரேன் சரிந்து விழுந்து விபத்து:
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள ஷாபூர் தெசில் பகுதியில் உள்ள பாலத்தின் ஸ்லாப் மீது, திடீரென கிரேன் சரிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 14 பேரின் உடல்கள் முதற்கட்டமாக மீட்கப்பட்டன. 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை தற்போது 17 ஆக உயர்ந்துள்ளது.
இடிபாடுகளில் மேலும் சிலர் பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 2 குழுக்கள் ஈடுபட்டுள்ளன.
2 தமிழர்கள் பலி:
விபத்தில் பலியானவர்களில் இரண்டு பேர் தமிழகர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதில் ஒருவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ் என்பதும், அவர் VSL கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்ததாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது உடல் விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றொருவர் திருவள்ளூரை சேர்ந்த கண்ணன் எனவும் தெரிய வந்துள்ளது.
ரூ.5 லட்சம் நிதியுதவி:
சம்பவம் தொடர்பாக பேசியுள்ள மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே “ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இங்கு வேலை செய்து வருகிறது. சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைக்கான அறிவுறுத்தல்கள் வழண்ங்கப்பட்டுள்ளன. துறைசார்ந்த அரசு அதிகாரிகளும் அமைச்சரும் சம்பவ இடத்தில் உள்ளனர்” என தெரிவித்தார். இதனிடையே, இந்த விபத்தில் பலியானவர்களுக்கு மத்திய அரசு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.
நடந்தது என்ன?
சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் சாபுர் என்ற இடத்தில் கட்டப்படும் பாலத்தின் 3-ம் கட்ட பணி நடைபெற்று வந்தது. இரண்டு தூண்களுக்கு இடையில் கான்கிரீட் தளத்தை தூக்கி வைப்பதற்காக கிர்டர் எனப்படும் ராட்சத கிரேன் பயன்படுத்தப்பட்டது. திடீரென அந்த ராட்சத இயந்திரம் சரிந்து விழுந்ததில் அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 17 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயேபரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர்.
சாலை கட்டுமான பணிகள்:
மும்பை- நாக்பூரை இணைக்கும் விரைவுச் சாலையாக இந்த சாலை கட்டப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சாலையானது நாக்பூர், வாசிம், வர்தா, அகமதாபாத், பல்தானா, அவுரங்கபாத், அமாரவதி, ஜல்னா, நாஷிக் மற்றும் தானே மாவட்டங்களை கடந்து செல்கிறது. மகாராஷ்டிரா மாநில அரசால் இந்த சாலை கட்டப்பட்டு வரும் இந்த சாலைக்கு சம்ருதி மஹாமார்க் என பெயரிடப்பட்டுள்ளது. நாசிக்-மும்பை இடையே 701 கிமீ நீளமுள்ள சம்ருத்தி மஹாமார்க்கின் மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டப் பணிகள் சர்கான் மற்றும் சரம்பேகெய்ன் இடையே நடைபெற்றுக்கொண்டுள்ளது. இந்த நிலையில் தான் நள்ளிரவு 1 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.