உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக உத்திர பிரதேசம் மகாகும்பமேளா இருப்பதால், இந்தியர்கள் மட்டுமின்றி உலக அளவில் பலரும், பங்கேற்று நீராடி வருகின்றனர். இந்நிலையில், பிரயாக்ராஜ்ஜில்  கூட்ட நெரிசல் ஏற்பட்டு, அதில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் உயிர்ழந்துள்ளவர்களின் குடும்பத்திற்கு ரூ. 25 லடசம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து குறித்து விசாரணை நடத்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எதற்காக, ஒரே நாளில் திடீரென இவ்வளவு கூட்டம்?; பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தது என்ன? 






மகா கும்பமேளா:


உத்தர பிரதேச பிரயாக்ராஜில், மகா கும்பமேளா விழாவானது நடைபெற்று வருகிறது. கும்பமேளா விழாவானது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இந்த முறை கொண்டாடப்படும் மகா கும்பமேளாவானது, 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் விழாவாக இருப்பதால் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஜனவரி மாதம் 13 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் இவ்விழாவானது, வரும் பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 


இங்கு இருக்கும் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் கங்கை , யமுனை மற்றும் சரஸ்வதி ( பூமிக்கு அடியில் ஓடுவதாக கூறப்படுகிறது ) ஆகிய மூன்று நதிகள் சந்திக்கும் இடமாக உள்ளது. இந்த நீரில், புனித நீராடினால், வாழ்க்கையில் நன்மைகள் நடக்கும் என்பது நம்பிக்கை. 




மவுனி அமாவாசை:


இந்நிலையில், இன்று தற்போதைய மகாகும்ப மேளாவின் மிகவும் முக்கியத்துவமான மவுனி அமாவாசையாகும். இன்றைய தினத்தில் , திரிவேணி சங்கத்தில் புனித நீராடினால் , மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில், புனித நதிகளின் நீர் அமிர்தமாக மாறும் என்று நம்பப்படுகிறது. இதனால், மௌனி அமாவாசையானது 'துறவிகளின் அமாவாசை' என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆகையால், இந்த தினத்தில் புனித நீராட கோடி கணக்கான மக்கள் ஒன்றாக கூடினர்.  


நேற்றைய தினம் மட்டும், மவுனி அமாவாசைக்கு ஒரு நாள் முன்னதாக, கிட்டத்தட்ட ஐந்து கோடி மக்கள் திருவிழாவின் போது நீராடுவதற்கு வந்தடைந்தனர் என்றும்,  உத்தரபிரதேச அரசாங்கத்தின் மதிப்பீட்டின்படி, இன்று  கூட்டம் சுமார் 10 கோடியாக இருக்கும் என்று தகவல் தெரிவிக்கின்றன.      


இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில், பக்தர்கள் திடீரென புனித நீராட குவிந்ததால, கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் , கூட்டத்தில் பலர் கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், பலர் அந்த இடங்களை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்பதற்காக கீழே விழுந்தவர்களை மிதித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த நிகழ்வால் 30 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. 




3 முறை அழைத்த பிரதமர்:


இந்நிலையில், விபத்து தொடர்பாக பிரதமர் மோடி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு காலையிலிருந்து 3 முறை தொலைபேசி வாயிலாக அழைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அங்கு இருக்கும் நிலைமை குறித்து கேட்டறிந்துதாகவும், பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் தெரிவித்ததாக தகவல் தெரிவிக்கின்றன. 


பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது, “ "பிரயாக்ராஜ் மஹாகும்ப மேளாவில் நடந்த விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது; குடும்பத்தினரை இழந்த பக்தர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் அனைத்து  வகையான உதவிகளை செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் , இது தொடர்பாக முதல்வர்  யோகி ஆதித்யநாத்திடம் பேசினேன். மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 






இதுகுறித்து உ.பி முதலமைச்சர் தரப்பு தெரிவித்ததாவது, “ தற்போது யாரும் திரிவேணி சங்கம் பகுதிக்கு சென்று கூட்ட நெரிசலை ஏற்படுத்த வேண்டாம் என்றும்; கங்கை கரை ஓரத்திலே புனித நீராடுமாறும், தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், 1920 என்கிற உதவி எண்களையும் அறிவித்துள்ளது.


எதிர்க்கட்சிகள் கண்டனம்:


இந்நிலையில், இச்சம்பவத்திற்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் , காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவல்  உள்ளிட்டோர் பாஜக யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தை தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். 






இந்நிலையில் புனித நீராடுவதற்காக வந்த மக்கள், கூட்டத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மேலும் பலர் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளிவந்துள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.