டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக வரும் மே 3-ஆம் தேதி மேஜிக் ஷோ நடத்தப்பட உள்ளது. கடினமான நிதி நெருக்கடிக்கு இடையே  மேஜிக் ஷோவிற்கு ரூ.5 லட்சத்தை செலவழிப்பது ஏன் என சில ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஒரு சில ஆசிரியர்கள்  5  லட்சம் செலவு செய்து மேஜிக் ஷோ நடத்தும் இந்த நடவடிக்கை "பொதுப் பணத்தை வீணடிப்பதாக" குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் அவர்கள் நிதி பற்றாக்குறையால் பல்வேறு R&D மானியங்கள் மற்றும் கண்டுபிடிப்பு திட்டங்கள் நிறுத்தப்பட்டதை சுட்டிக்காட்டினர்.


"டெல்லி பல்கலைக்கழகம் (டியு) ஹாக்வார்ட்ஸ் அல்ல என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. இங்கு நூலகம், ஆய்வகம், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஆராய்ச்சிக்கான நிதி பற்றாக்குறையை அதிகாரப்பூர்வக் குழுவே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், பொதுப் பணத்தை மேஜிக் ஷோக்களுக்குச் செலவிடுவது சுத்த விரயம்" என்று DUவின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் ஜா  தெரிவித்துள்ளார். 


நிகழ்வின் போஸ்டர் தகவலின்படி, பிரபல ஜாதுகர் சாம்ராட் சங்கர் மே 3 அன்று பல்நோக்கு விளையாட்டு நிகழ்ச்சியை வழங்குவார். டெல்லி பல்கலைக்கழகத்தின் கலாச்சார கவுன்சில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. 


மேஜிக் ஷோவை பார்ப்பதற்கு பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஆர் அன்ட் டி மானியம் மற்றும் புத்தாக்க திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட மேம்பாட்டு நிதி 150 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியான சூழ்நிலையில், மேஜிக் ஷோ நடத்துவது பல்கலைகழகத்தின் நிதியில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்ற கருத்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பல கல்லூரிகளில் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் மேஜிக் ஷோ நடத்தப்படுகிறது.


இதற்கிடையில், டெல்லி பல்கலைக்கழகம் இந்த நடவடிக்கையை ஆதரித்துள்ளது. "பாடகர்கள் வழக்கமாக ஒரு நிகழ்ச்சிக்கு ரூ. 40 லட்சம் முதல் 60 லட்சம் வரை வசூலிக்கும் நிலையில் 5 லட்சம் பெரிய  தொகை அல்ல என்று  பல்கலைக்கழகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 


"மேஜிக் ஷோவிற்கு யாரும் பணம் செலுத்த வேண்டியதில்லை. முன்பதிவு மூலம் நிகழ்ச்சியை பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது. நூற்றாண்டு விழா நிதியில் இருந்து இதற்கான பணம் செலவு செய்யப்படுவதாகவும், பெரிய நிகழ்ச்சிகளுக்கு கல்லூரிகள் லட்சங்களில் கொடுக்கும் நிலையில் இந்தத் தொகை பெரிது இல்லை” என்றும் பல்கலைக்கழக அதிகாரி தெரிவித்தார்.


"மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காக நாங்கள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறோம். நிகழ்ச்சியில் சுமார் 3,000 பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மேஜிஷியன் இந்தியா முழுவதும் பிரபலமானவர், மேலும் அவர் எங்களிடம் மிகக் குறைந்த தொகையை வசூலிப்பதாகவும்” பல்கலைக்கழக அதிகாரி தெரிவித்தார். 


மிராண்டா ஹவுஸைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் அபா தேவ் ஹபீப், மேஜிக் ஷோவுக்குப் பதிலாக ஆராய்ச்சியாளர்கள் சில வகையான அறிவை வழங்கக்கூடிய ஒரு கருத்தரங்கை பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருக்கலாம் என்று பரிந்துரைத்தார். "பல்கலைக்கழகம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கும் நேரத்தில், இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு பணம் விரயமாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.


பல்கலைக்கழகத்தின் அகாடமிக் கவுன்சில் உறுப்பினர் ஒருவர், "ஒருபுறம், அவர்கள் (டியூ) நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி உயர் கல்வி நிதியளிப்பு முகமை (ஹெஃபா) கடன்களை நாடுகிறார்கள், மறுபுறம் அவர்கள் மேஜிக் ஷோவை நடத்துகிறார்கள்."  என்று தெரிவித்தார். "நூற்றாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் இது முற்றிலும் முட்டாள்தனம் என்றும் பணம் முழுவதுமாக வீணடிக்கப்படுவதாகவும், இந்த பணத்தை வேறு எதற்காவது செலவு செய்திருக்கலாம் எனவும் இணை பேராசிரியர் நவீன் கவுர் கூறினார்.