Madurai AIIMS: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு அரசியல் காரணம் எதுவும் இல்லை என மத்திய அமைச்சர் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தாமதத்திற்கு நடைமுறைச் சிக்கல் தான் காரணமே தவிர, அரசியல் காராணம் எதுவும் இல்லை என மத்திய குடும்பநல மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்கு முன்னதாக, தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன், ”ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டது பிலாஸ்பூர் எய்ம்ஸ், மதுரை எய்ம்ஸ். ஆனால், ஒன்று திறக்கப்பட்டு விட்டது. ஒன்றுக்கு இன்னமும் சுவர் கூட கட்டவில்லை. அரசியல் ரீதியாக ஒன்றிய அரசு ஒன் சைட் கேம் ஆடுவது போல தெரிகிறது. ஒன்றிய அரசு அரசியல் நோக்கத்துடன் தான் அனைத்தையும் செய்வதாக தெரிகிறது. மக்கள் நலனுக்காக எதையும் செய்வதாக தெரியவில்லை. ஒரு தலைப்பட்சமாக நிதியினை வைத்து பல அரசியல் தந்திர வேலைகளை செய்ய முடியும் என்று ஒன்றிய அரசு நினைக்கிறது” என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு முன்னதாக, மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நிதியை ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் என கே.கே.ரமேஷ் மனு செய்து இருந்தார்.இந்த மனு விசாரணையின் போது மத்திய அரசு 36 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிவடையும் என தெரிவித்திருந்தது இதனையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தற்போது வரை தொடங்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே, மத்திய முதன்மைச் செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை கொண்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பது குறித்து முடிவெடுக்க நீதிபதிகள் ரமேஷ், புகழேந்தி அமர்வு முன்பு பட்டியலிடப்பட்டது. அப்போது, மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில்,
* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 1977.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான காலம் 5 வருடம் 8 மாதம் ஆகும். (மார்ச் 2021 முதல் அக்டோபர் 2026)
* அதிக செலவு மற்றும் அதிக நேரத்திற்கான அனுமதி மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்கி செலவின துறை பரிசீலனையில் உள்ளது.
* மதுரையிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை எம்பிபிஎஸ் படிப்பு ராமநாதபுரம் தற்காலிக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனர் மற்றும் நிர்வாக துணை இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
என மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கூடாது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள்,எவ்வாறு அக்டோபர் 2026ல் பணிகள் முடிவடையும் என்பது குறித்த நிலை அறிக்கையை மத்திய முதன்மை செயலர் தாக்கல் செய்ய உத்தரவிட்ட மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.