ஒரு காலத்தில், ராகிங் கொடுமை என்பது நாடு முழுவதும் பெரிய பிரச்சினையாக இருந்தது. அதை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததன் விளைவாக ராகிங் பிரச்சினை தற்போது குறைந்துள்ளது. இருப்பினும், அங்கும் இங்குமாய் ராகிங் பிரச்சினை தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.


இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மகாத்மா காந்தி மெமோரியல் (எம்ஜிஎம்) அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த ராகிங் சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக 24 வயது பெண் போலீஸ் அதிகாரி மருத்துவ மாணவியாக மாறுவேடம் போட்டு சென்றுள்ளார்.


கல்லூரியின் மாணவர் ஒருவர் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) ஹெல்ப்லைனில் புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் அடையாளம் தெரியாத மாணவர்கள் மீது ஜூலை 24 அன்று கிரிமினல் வழக்குப் பதிவு செய்தது.


இதுகுறித்து சன்யோகிதகஞ்ச் காவல் நிலையப் பொறுப்பாளர் தெஹ்சீப் காஜி கூறுகையில், "பல்கலைக்கழக மானிய குழுவின் ஹெல்ப்லைனில் ராகிங் சம்பவம் குறித்த முழு விவரங்கள் இருந்தன. ஆனால், அதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் புகார் அளித்த மாணவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.


சமூக வலைதளங்களில் மாணவர்கள் சாட்டிங் செய்தது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்டுகளும் புகாரில் இடம்பெற்றிருந்தன. ஆனால், எத்தனை மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்டனர் என்பது குறித்து தகவல் கிடைக்கவில்லை.


எனவே, இதை கண்டுபிடிக்க ஒரு பெண் போலீஸ் அதிகாரி கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் மருத்துவ மாணவியாக நடித்து வழக்கின் அனைத்து விவரங்களையும் சேகரித்து குற்றவாளியை கண்டுபிடித்துள்ளார்.


மற்றொரு பெண் அதிகாரி செவிலியராக நடித்துள்ளார். இரண்டு கான்ஸ்டபிள்கள் கேன்டீன் பணியாளர்களாக கல்லூரிக்கு அனுப்பப்பட்டனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விரிவான விசாரணை குற்றத்தை உறுதி செய்தது மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட 11 மாணவர்களை அடையாளம் காணவும் காவல்துறைக்கு உதவியது.


 






விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட மூத்த மாணவர்கள் தங்கள் ஜூனியர்களை சில ஆபாசமான செயல்களைச் செய்து ராகிங் செய்ததாகக் கூறப்படுகிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) தொடர்புடைய விதிகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


மேலும், அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படும்போது நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களின் பட்டியலைப் பெற்ற பிறகு, கல்லூரி நிர்வாகம் அவர்களை கடந்த வாரம் உடனடியாக மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் செய்தது" என்றார்.