பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் மாவட்ட காவல்துறை உயரதிகாரி ஒருவர் வெளியிட்ட சுற்றறிக்கை ஒன்று அரசியல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவர் வெளியிட்ட சுற்றறிக்கையில் விஐபிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரவாத அமைப்புகளாக குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகளுடன் இஸ்லாமிய, சீக்கிய சமூகங்களையும் சமப்படுத்தியிருப்பது இந்த சர்ச்சைகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது. 


மத்தியப் பிரதேசத்தின் கட்னி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் குமார் ஜெயின், கடந்த டிசம்பர் 6 அன்று, மாநிலத்தின் ஆளுநர் மங்குபாய் படேல் கட்னி மாவட்டத்திற்கு வருகை தந்தது குறித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வெளியிட்ட இரு பக்க உத்தரவு இந்த சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. 


காவல்துறை முதலான பாதுகாப்பு அமைப்புகளுக்கு வெளியிடப்பட்ட 23 விதிமுறைகளுள் ஆறாவதாகக் கொடுக்கப்பட்ட விதிமுறை சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. அந்த ஆறாவது விதிமுறையில் சீக்கியர்கள், இஸ்லாமியர்கள், ஜே.கே.எல்.எஃப் அமைப்பினர், உல்ஃபா அமைப்பினர், சிமி அமைப்பினர், விடுதலைப் புலிகள் ஆகியோரின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்தச் சர்ச்சைக்குரிய உத்தரவின் நகலைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார்  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளருமான கே.கே.மிஷ்ரா. தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், `எஸ்.பி கட்னிக்கு நன்றி. இவ்வளவு நாள்களாக பாஜக மட்டுமே நாட்டின் விவசாயிகளையும், முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாக நடத்தியது. தற்போது நீங்களும், உங்கள் காவல்துறையினரும் அதிகாரப்பூர்வமாக சீக்கியர்களையும், முஸ்லிம்களையும் ஆளுநரின் வருகையை ஒட்டி தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தியுள்ளீர்கள். நீங்கள் காவல்துறை கண்காணிப்பாளரா, பாஜக பேச்சாளரா? இந்த அரசு உங்களுக்கு நிச்சயம் பத்மஸ்ரீ விருது வழங்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார். 


மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த தலைவருமான நரேந்திர சலூஜா இந்தக் கடிதத்தைக் கண்டித்துள்ளார். `தேசப்பற்று மிக்க சீக்கிய சமூகம் தீவிரவாதிகளாக ஒப்பிடப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. கட்னியின் காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனினும், சிவராஜ் சவுகானின் அரசுக்கும், பாஜகவுக்கும் அவரைப் போன்ற நம்பிக்கையே இருப்பதால் அது நடக்காது என்று புரிகிறது’ என்று அவர் கூறியுள்ளார்.


தான் வெளியிட்ட இரு பக்க உத்தரவு பெரிய அரசியல் விவகாரமாக வெடித்திருப்பதால், கட்னியின் காவல் கண்காணிப்பாளர் சுனில் குமார் ஜெயின் இதுகுறித்து மௌனம் கலைத்துள்ளார். தட்டச்சு செய்தவரின் பிழை என்றும், அது குறித்து மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். `தட்டச்சு செய்தவரின் பிழைக்காக வருத்தம் கொள்கிறேன். யாரின் உணர்வுகளையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை. இந்தத் தவறைச் செய்த அந்த எழுத்தருக்கு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. அதன்மீதான அவரின் பதிலின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சுனி ஜெயின் கூறியுள்ளார்.