ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ நீக்கி மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிராக  தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.


இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய், சூர்யா காந்த், சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பில், "ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்டதை தொடர்ந்து, சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


உச்ச நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு:


ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு எதிராக மனுதாரர்கள் தனிப்பட்ட வழக்கு தொடுக்கவில்லை என்பதால் அதில் தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.


மத்திய அரசின் அதிகாரங்கள் குறித்து பேசிய தலைமை நீதிபதி, "குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ள மாநிலங்களில் மத்திய அரசின் அதிகாரங்களில் வரம்ப உள்ளது. சட்டப்பிரிவு 356இன் கீழ் அதிகாரத்தைப் பயன்படுத்துதல், குடியரசு தலைவர் உத்தரவின் நோக்கத்துடன் நியாயமான தொடர்பைக் கொண்டிருக்க வேண்டும்" என்றார்.


இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ள பிரதமர் மோடி, "சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வது தொடர்பான இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. கடந்த 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி இந்திய நாடாளுமன்றம் எடுத்த முடிவு செல்லும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


பிரதமர் மோடி வரவேற்பு:


ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள நமது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு நம்பிக்கையை தரும் முன்னேற்றத்தை வழங்கும்  ஒற்றுமையை வளர்க்கும் உறுதியான தீர்ப்பு. இந்தியர்களாகிய நாம், ஒற்றுமையை அன்போடும் பற்றோடும் வைத்திருக்கிறோம்.
நீதிமன்றமும், அதன் ஆழ்ந்த ஞானத்தில் ஒற்றுமையை வலுப்படுத்தியுள்ளது.


ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு அசைக்க முடியாது என்பதை நான் உறுதியளிக்க விரும்புகிறேன். முன்னேற்றத்தின் பலன்கள் உங்களை சென்றடைவது மட்டுமல்லாமல், 370வது பிரிவின் காரணமாக பாதிக்கப்பட்ட நமது சமூகத்தின் மிகவும் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கும் அதன் பலன்களை வழங்குவதை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.


 






இன்றைய தீர்ப்பு வெறும் சட்டத்தில் எழுதப்பட்ட தீர்ப்பு மட்டுமல்ல. இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், ஒளிமயமான எதிர்காலத்திற்கான வாக்குறுதியாகவும், வலிமையான, ஒன்றுபட்ட இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கான நமது கூட்டு உறுதிப்பாட்டின் சான்றாகவும் உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.