மத்தியப் பிரதேசத்தில் அருகே உள்ள டோல்கேட் ஒன்றில் பெண் ஊழியரை ஒரு நபர் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


மத்தியப் பிரதேசம் மாநிலம் ராஜ்கர்-போபால் சாலையில் உள்ள கச்னாரியா சுங்கச்சாவடியில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒரு நபரை வரி செலுத்தாமல் செல்ல அனுமதிக்க மறுத்ததால் அந்த நபர் அந்த பெண் ஊழியரை கன்னத்தில் அறையும் வீடியோ இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. 


முதலில் அந்த நபர் கோபத்துடன் பெண் ஊழியரை நோக்கி நடந்து செல்வதையும், பின்னர் அந்த பெண்ணின் முகத்தில் அறைந்ததையும் சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன. இதனால் அந்தப் பெண் கோபமடைந்து தனது காலில் இருந்த  காலணியை கழட்டி அந்த நபரை 4 - 5 முறை  திருப்பி அடிக்கிறார். 


ஃபாஸ்டேக் - எலக்ட்ரானிக் கட்டணம் செலுத்தும் கார்டு இல்லாத காரில் இருந்த ராஜ்குமார் குர்ஜார் என்ற நபர், தான் ஒரு உள்ளூர்காரர் என்றும், எனவே டோல் கட்டணம் செலுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த பெண் ஊழியர்  உள்ளூர்காரர் என்பதை நிரூபிக்க ஆவணம் கேட்டுள்ளார்.  இதை கேட்டு கடுப்பான அந்த பெண்ணை அடித்ததாக கூறப்படுகிறது. 


இதுகுறித்து அந்த சுங்கச்சாவடி ஊழியர் அனுரந்தா டாங்கி தெரிவிக்கையில், "அவர் ஒரு உள்ளூர்க்காரர் என்று சொன்னார். நான் அதற்கு எனக்கு உங்களைத் தெரியாது என்று கூறி மேற்பார்வையாளரிடம் இது தொடர்பாக தெரிவித்தேன். மேற்பார்வையாளர் எனக்கு அந்த நபரை தெரியுமா என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்னேன். பின்னர் அந்த நபர் தனது வாகனத்தை விட்டு வெளியேறி வந்து என்னை அடித்தார். நானும் அவரை திருப்பி அடித்தேன்" என்று தெரிவித்தார். 






தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அந்தப் பெண், ஏழு பெண் ஊழியர்களைக் கொண்ட சுங்கசாவடியில் பாதுகாப்பு காவலர்கள் கூட இல்லை.


உள்ளூர் காவல் நிலையப் பொறுப்பாளர் ராம்குமார் ரகுவன்ஷி கூறியபோது, “ பாதிக்கப்பட்ட பெண் அனுராதா டாங்கி அந்த நபருக்கு எதிராக எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். அதன் அடிப்படையில் நாங்கள் வழக்குப் பதிவு செய்தோம். அவர் மீது 354, 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்) மற்றும் 506 (குற்றம்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதைத் தடுக்கும் சட்டத்தின் பிரிவு 3 ஆகியவற்றின் மிரட்டல். குற்றம் சாட்டப்பட்டவர் இன்னும் கைது செய்யப்படவில்லை" என்று குறிப்பிட்டார்.