சீனா, அமெரிக்காவில் உள்ள பெண்கள் அறிவியல் உலகில் வாழ்கிறார்கள்; ஆனால், இந்தியாவில் உள்ள பெண்களுக்கு அந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது துர்திஷ்டமான ஒன்று என்று ராஜஸ்தான் மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரண துறை அமைச்சர் கோவிந்த் ராம் மெக்வால் (Govind Ram Meghwal ) கருத்து தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று பெண்களை மரியாதை குறைவான கருத்துக்களை கூறிய அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாநில பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


ஜெய்ப்பூரில் நடந்த ‘டிஜிஃபெஸ்ட்’ என்ற நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரண துறை அமைச்சர் பேசுகையில், “சீனாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பெண்கள் அறிவியல் உலகில் வாழ்கிறார்கள்; ஆனால் இன்றும் இங்குள்ள பெண்கள் கர்வ சந்த பண்டிகையின் போது சல்லடை மூலம் தங்கள் கணவர்களின் நீண்ட ஆயுளுக்காக நிலா பார்க்கிறார்கள். இது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் ஒரு கணவன் தன் மனைவியின் நீண்ட ஆயுளுக்காக சல்லடையைப் பார்ப்பதில்லையே” என்று  கூறினார்.






வளர்ந்த நாடுகளான சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வாழும் பெண்கள் அறிவியல் ரீதியாக செயல்பட வாய்ப்பு இருக்கிறது;   இந்திய பெண்கள் இன்னும் சல்லடை மூலம் நிலாவைப் பார்த்து, தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக ‘கர்வா சவுத்’ அன்று பிரார்த்தனை செய்வது துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் அசோக் கெஹோல்ட்  ( Ashok Gehlot) உடன் இருந்தார் என்பதும் அவர் இந்த கருத்து குறித்தும் ஏதும் சொல்லவில்லை என்பதும் விவாதத்திற்கு உள்ளானது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் எம்.எல்.ஏ. ராம்லால் ஷர்மா (Ramlal Sharma),விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா விண்வெளிக்குச் சென்றிருப்பதையும், பல இந்தியப் பெண்கள் விமானிகளாகப் பணியாற்றுவதையும் மேக்வால் அறிந்திருக்க வேண்டும், இந்தியப் பெண்கள் மரபுகளைப் பின்பற்றுவதில் பெயர் பெற்றவர்கள் என்றும், அவர்களது தனிப்பட்ட மற்றும் பணி வாழ்க்கைக்கு இடையே சமநிலையை பின்பற்ற தெரிந்தவர்கள் என்றும் கூறியுள்ளார். 


 







மேலும், ராம்லால் ஷர்மா இந்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த அமைச்சர் மீது, முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


இதற்கு பதிலளித்துள்ள மேஹ்வால், இந்தியப் பெண்கள் குறித்த நான் தவறாக பேசவில்லை என்றும் அறிவியல் சார்ந்த மனப்பான்மை மற்றும் கல்வியை  ஊக்குவிப்பதாக மட்டுமே அப்படி கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும்,  “நான் கர்வசந்த் பண்டிகைக்கு எதிரானவன் அல்ல. அதைப் பின்பற்ற விரும்புபவர்கள் தாராளமாக கொண்டாடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.


மேக்வால்  மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நாட்டின் கோடிக்கணக்கான பெண்களை அவர் அவமதித்துள்ளார் என்றும் பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. அவர் மன்னிப்பு கேட்டு அவரது கருத்தை திரும்பப் பெற வேண்டும்” என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர்மான ராம்லால் சர்மா கூறியுள்ளார்.