மத்தியப் பிரதேசத்தில் இறந்த தாயின் உடலை மோட்டார் பைக்கில் மகன் எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமரர் ஊர்தி இல்லை என மருத்துவ நிர்வாகம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள அனுப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோதாறு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்மந்திரி யாதாவ். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதல் உதவி வழங்கப்பட்டது, ஆனால் இவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த காரணத்தால், மாவட்ட மருத்துவ நிர்வாகம், அதே மாவட்டத்தில் உள்ள ஷாடோல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் படி கூறியுள்ளனர்.
ஷாடோல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெய்மந்திரி யாதாவ்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காததால் அவர் உயிர் இழந்துள்ளார். இதனால், ஜெய்மந்திரி யாதவின் மகன் சுந்தர் யாதவ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் அமரர் ஊர்தி கேட்டுள்ளார். இதனை அடுத்து, உயிரிழந்த ஜெய்மந்திரி யாதாவ் உடலை எடுத்துச் செல்ல மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் அமரர் ஊர்தி இல்லை என கூறியுள்ளது. ஆனால் தனியார் அமரர் ஊர்தியில் அவரது தாயின் உடலை எடுத்துச் செல்வதற்கு 5,000 ரூபாய் கேட்டுள்ளனர். இந்த தொகையினை கொடுக்க முடியாத சூழலில் இருந்த சுந்தர் யாதவ், தனது தாயின் உடலை மோட்டார் பைக்கில், கட்டைகளை வைத்து கட்டி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது சொந்த கிராமமான கோதாறுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
இந்த அவலச் சம்பவம் குறித்து சுந்தர் யாதவ் கூறியதாவது, எனது அம்மாவிற்கு சரியான மற்றும் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. எனது அம்மாவின் மரணத்திற்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தான் காரணம் எனவும் கூறியுள்ளார். மேலும், எனது அம்மா இறந்த பிறகும் அமரர் ஊர்தி தர மறுத்துவிட்டனர். என்னால் 5,000 எனும் தொகையினை கொடுத்து தனியார் அமரர் ஊர்தியினை ஏற்பாடு செய்ய முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்