பாஜக ஆளும் முக்கியமான மாநிலங்களில் ஒன்று மத்தியப் பிரதேசம். கடந்த 2003ஆம் ஆண்டு முதல் நடுவில் ஓராண்டை தவிர கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் பாஜக தொடர்ந்து ஆட்சி செய்து வரும் மாநிலம். பாஜக ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.


பாஜகவின் கோட்டையாக உள்ள மத்திய பிரதேசம்:


ஆனால், முதலமைச்சர் பதவியை பெறுவதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல் நாத், இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கிடையே தொடர் போட்டி நிலவி வந்தது. கமல் நாத்துக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டதால் சிந்தியா அதிருப்தியில் இருந்து வந்தார்.


இறுதியில், சொந்த கட்சிக்கு எதிராக போர்க்கோடி தூக்கிய சிந்தியா, தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைந்தார். இதனால், ஆட்சி அமைத்த ஒரே ஆண்டில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்று, ஆட்சி நடத்தி வருகிறார்.


இச்சூழலில், மத்திய பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் இந்தாண்டு இறுதியுடன் முடிவடைகிறது. எனவே, ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மாநில தேர்தலுடன் மத்தியப் பிரதேசத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வாக்குறுதிகளை அள்ளி வீசிய காங்கிரஸ்:


கர்நாடகாவில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தை குறி வைத்துள்ளது காங்கிரஸ். ஐந்தாண்டு பதவி காலத்திற்கு நடுவே ஆட்சி கவிழ்ந்தாலும் கர்நாடகாவை போன்று மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும் நோக்கில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார். மாநிலத்தில் ஆட்சி அமைத்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என கார்கே அறிவித்துள்ளார்.


வாக்குறுதிகளை விரிவாக விவரித்து பேசிய அவர், "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளுக்கு கடன் தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்று உறுதியளிக்கிறேன். 500 ரூபாய்க்கு எல்பிஜி சிலிண்டர் கிடைக்கும். பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும். 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். மாநிலத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம்" என்றார்.


கடந்த செவ்வாய்க்கிழமை, மத்தியப் பிரதேசம் மாநிலம் சாகரில் நடந்த பொதுக்கூட்டத்தில்தான் கார்கே, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, கார்கே மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு செல்வது இதுவே முதல் முறை. புந்தேல்கண்ட் பகுதியில்தான் சாகர் அமைந்துள்ளது.


புந்தேல்கண்ட் பகுதியில் சாகர், சட்டர்பூர், திகம்கர், நிமாரி, தாமோ மற்றும் பன்னா ஆகிய ஆறு மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் 26 சட்டப்பேரவை இடங்கள் உள்ளன. கடந்த தேர்தலில், இந்த 26 தொகுதிகளில் 9 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றிபெற்றது.


மொத்தமுள்ள 26 தொகுதிகளில் ஆறு இடங்கள் பட்டியல் சாதி (SC) வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரிசர்வ் தொகுதிகளாகும். கடந்த 2018 மாநிலத் தேர்தலில், பினா, நரியோலி, ஜதாரா, சந்தாலா மற்றும் ஹட்டா ஆகிய ஐந்து இடங்களில் பாஜக வெற்றியைப் பெற்றது. அதே நேரத்தில் காங்கிரஸ் குன்னூர் ரிசர்வ் தொகுதியை கைப்பற்றியது.