நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான் 3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு கடந்த மாதம் 14ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. 40 நாட்கள் பயண திட்டத்தின்படி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட்டது.


உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த சந்திரயான் 3: 


இந்திய நேரப்படி சரியாக நேற்று மாலை 6.04 மணிக்கு லேண்டரை இஸ்ரோ தரையிறக்கியது. இதன் மூலம், நிலவின் தென்துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. அதுமட்டும் இன்றி, இதற்கு முன்னதாக, மூன்று நாடுகள் மட்டுமே நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி வெற்றிகரமாக தரையிறக்கம் செய்துள்ளது.


ஒட்டுமொத்த நாடும் சந்திரயான் 3 வெற்றியை கொண்டாடி வரும் நிலையில், 9 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை கேலி செய்யும் விதமாக உலகின் புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாள் வெளியிட்ட கார்டூன் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இந்தியாவை கேலி செய்த நியூயார்க் டைம்ஸ் கார்டூன்:


கடந்த 2014ஆம் ஆண்டு, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் வகையில் அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலத்தின் வெற்றியை தொடர்ந்து, அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாள் கார்டூன் ஒன்றை வெளியிட்டது. 450 கோடி ரூபாய் செலவில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் மங்கள்யான் விண்கலத்தை நிலைநிறுத்தியதன் மூலம் குறைந்த செலவில் வேற்று கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பிய பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது. 


இதற்கு முன்பு, அமெரிக்க, ரஷியா, ஐரோப்பிய நாடுகள் மட்டுமே செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பியிருந்தது. இப்படிப்பட்ட சூழலில், மங்கள்யான் தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட கார்டூன் சர்ச்சையை கிளப்பியது. அதில், அறை ஒன்றில் மேற்கத்திய உடை அணிந்த இருவர் அமர்ந்திருக்கின்றனர். அதன் கதவில் "எலைட் ஸ்பேஸ் கிளப்" என எழுதப்பட்டிருக்கிறது. அந்த கதவை பசுவுடன் வரும் இந்திய கிராமவாசி ஒருவர் தட்டுகிறார்.


9 ஆண்டுகளுக்கு பிறகு பதிலடி:


இந்த கார்டூனுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் சாதனையை கேலி செய்யும் விதமாகவும் இனவெறியும் கார்டூன் வடிவமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பெரும் கொந்தளிப்பை தொடர்ந்து, நியூயார்க் டைம்ஸ் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது.


அப்போது, இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் தலையங்க பக்க ஆசிரியர் ஆண்ட்ரூ ரோசென்டல் விளக்கம் ஒன்றை அளித்திருந்தார். அதில், "கார்ட்டூன் மீது ஏராளமான வாசகர்கள் புகார் கூறியுள்ளனர். விண்வெளி ஆய்வு என்பது பணக்கார, மேற்கத்திய நாடுகளின் பிரத்யேக களமாக இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதே கார்ட்டூனிஸ்ட்டின் நோக்கம் இருந்தது. இந்த கார்ட்டூனில் உள்ள படங்களால் மனம் புண்பட்ட வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.