மத்திய பிரதேசத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தையை ரோபோடிக் நிபுணர்கள் உதவியுடன் 3 நாட்கள் போராடி ராணுவ வீரர்கள் மீட்டனர். சுமார் 55 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட பெண் குழந்தை ஸ்ருஷ்டியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழு குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 


இரண்டரை வயது குழந்தை:


மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ளது செஹோர் மாவட்டம். இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது முங்காவகி கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வந்த தம்பதிக்கு சிருஷ்டி என்ற குழந்தை இருந்தது. இந்த குழந்தைக்கு இரண்டரை வயது ஆகிறது. இவர்களது வீட்டின் அருகே 300 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்ட போர்வெல் கிணறு ஒன்று திறந்த நிலையில் இருந்துள்ளது.


இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை இந்த துளையில் இரண்டரை வயதான பெண் குழந்தை சிருஷ்டி தவறி விழுந்துள்ளது. இதைக் கண்டு பதறிய அந்த குழந்தையின் தாய் ராணி அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிய, இந்த தகவல் காவல்துறை, தீயணைப்பு மீட்புத்துறையினருக்கு சென்றது.






இதையடுத்து, மீட்புத்துறையினர் பொக்லைன் எந்திரங்கள்,நவீன தொழில்நுட்ப உதவியுடன் குழந்தையை மீட்க முயற்சித்தனர். அவர்களுக்கு உறுதுணையாக குஜராத்தில் இருந்து ரோபோடிக் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். தொழில்நுட்ப நிபுணர்கள், தீயணைப்பு துறையினர், பேரிடர் மீட்புக்குழுவினர் ஆகியோருடன் ராணுவமும் இணைந்தது குழந்தையை மீட்கும் பணியை துரிதப்படுத்தினர்.


போராட்டம் வீண்:


குழந்தையின் சுவாசத்திற்காக ஆக்சிஜன் அனுப்பப்பட்டாலும் தாமதம் ஆகிக்கொண்டே இருந்ததால் பெற்றோர்களும், கிராமத்தில் அச்சத்தில் உறைந்தனர். 300 அடி ஆழ்துளை கிணற்றில் சுமார் 100 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்ட குழந்தையை மீட்கும் முயற்சியில் சுமார் 55 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தை இன்று மயங்கிய நிலையில் மீட்கப்பட்டது.


மயங்கிய நிலையில் இருந்த குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்தபோது குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். 55 மணி நேரம் போராடி மீட்ட பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: 700 Indian Students: கனடாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் 700 இந்திய மாணவர்கள்? காப்பாற்றுமா மத்திய அரசு?


மேலும் படிக்க:  Crime: கொடூரம்! 13 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து கொலை - பாஜக முன்னாள் தலைவர் உள்பட 3 பேர் கைது!